திருப்பரங்குன்றத்தில் மின்னொளியில் தெப்ப உற்சவம் நடந்தபோது எடுத்தபடம். 
ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்ப உற்சவம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் தெப்பத்தை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 8-ந்தேதி தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் இரவு சாமி புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று முன்தினம் தெப்ப முட்டு தள்ளுதல், தேரோட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தெப்ப உற்சவம் கோலாகலமாக நடை பெற்றது.

திருவிழாவையொட்டி காலை 9.30 மணிக்கு கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமிக்கு தங்கம், பவளம், வைடூரியம் போன்ற நகைகளாலும், வாசனை கமழும் வண்ண மலர்களாலும், பட்டு வஸ்திரங்களாலும் சர்வ அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதனையடுத்து மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து சாமி புறப்பட்டு ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள தெப்பக்குளம் மண்டபத்தில் எழுந்தருளினார்.

பின்னர் தெப்பக்குளத்தில் தயாராக இருந்த தெப்பத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உடனே அங்கு கூடி இருந்த பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா“ என்று பக்தி கோஷங்கள் எழுப்பியபடி தெப்ப மிதவையில் இணைக்கப்பட்டிருந்த வடத்தினை பிடித்து இழுத்து, தரிசனம் செய்தனர்.

தெப்பக்குளத்திற்குள் நிரம்பிய தண்ணீரில் 3 முறை தெப்ப மிதவை வலம் வந்தது. பின்னர் மீண்டும் இரவு 7 மணி அளவில் மின்னொளியில் தெப்ப திருவிழா நடைபெற்றது.

SCROLL FOR NEXT