ஆன்மிகம்

நாளை திருக்கார்த்திகை திருவிழா: பழனியில் பகல் 2 மணிக்கு மேல் தரிசனம் ரத்து

அதிகாலை 4.30 மணிக்கு விழா பூஜையும் அதனைத் தொடர்ந்து சின்னக்குமாரர் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

பழனி தண்டாயுதபாணி கோவிலில் நாளை திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற உள்ளது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, பகல் 2 மணிக்கு தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்படும். மாலை 6 மணிக்கு மீண்டும் தரிசனம் அனுமதிக்கப்படும். இரவு தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் திருகார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்றாகும். 7 நாட்கள் நடைபெறும் இவ்விழாவானது கடந்த 18-ந்தேதி மலைக்கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இன்று மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையின் போது பரணி தீபம் ஏற்றப்பட்டு சண்முகர் அர்ச்சனை நடைபெறும். மாலை 6.15 மணிக்கு தமிழ்க்கடவுள் முருகன் என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு, திருவாசக பாராயணம் நடைபெறும்.

நாளை (24-ந் தேதி) திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். இதனை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபதரிசனம் நடைபெறும். அதிகாலை 4.30 மணிக்கு விழா பூஜையும் அதனைத் தொடர்ந்து சின்னக்குமாரர் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

தொடர்ந்து யாகசாலை தீபாராதனை, மலைக்கோவிலில் 4 மூலைகளிலும் தீபம் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

தரிசனம் ரத்து

மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின் திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோவிலிலும் தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறும். திருக்கார்த்திகையை முன்னிட்டு நாளை பக்தர்கள் எண்ணிக்கைக்கு ஏற்பவும், சூழலுக்கு ஏற்பவும் பகல் 2 மணிக்கு படிப்பாதை கேட் தற்காலிகமாக அடைக்கப்படும். பின்னர் மீண்டும் மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளை இரவு மலைக்கோவிலில் நடக்கும் தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT