சோழவளநாட்டின் தலைநகரான தஞ்சை மாநகரில் முதலாம் இராசராசனால் எடுப்பிக்கப் பெற்ற வரலாற்றுப் புகழ் மிகுந்த சிவாலயம் இராசராசேச்சரம் என வழங்கப்படும் பெரியகோவில் ஆகும்.
சைவத்தில் கோவில் என்பது சிதம்பரத்தைக் குறிக்கும். அதுபோல, பெரியகோவில் என்பது தஞ்சை இராசராசேச்சரம் என்னும் பெருவுடையார் திருக்கோவிலைக் குறிக்கும். இப்பெரிய கோயில் ஒன்பதாம் திருமுறையாகிய திருவிசைப்பா பெற்ற சிறப்பினையுடையது.
இக்கோவில் சோழப் பேரரசன் மாமன்னன் முதலாம் இராசராசன் அவர்களால் கி.பி.1003 - 1010 வரை கருங்கற்களை மட்டுமே கொண்டு கட்டி எழுப்பப்பட்ட ஒரு கற்றளி ஆகும். பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பித்த திருக்கற்றளி ஸ்ரீ இராசராசேச்சுரம் - என்று கல்வெட்டு மூலம் இதன் சிறப்பினை அறியலாம்.
இத்திருக்கோவில் சிறு கோட்டை அகழி அரண்களோடு சுமார் 793 அடி நீளமும் 397 அடி அகலமும் உடையது. இத்திருக்கோவில் கிழக்கு நோக்கிய வாயிலைக் கொண்டுள்ளது. முன்னர் அகழியைக் கடந்து சென்றால் மராட்டியர் வாயில் என்றழைக்கப்படும் நுழைவு வாயில் உள்ளது. இந்த நுழைவு வாயிலில் இடது புறம் விநாயகரும், வலது புறம் முருகனும் உள்ளனர்.
இதனை கடந்து சென்றதும் கேரளாந்தகன் வாயில் எனப்படும் சேர நாட்டின் காந்தளூர்ச் சாலையை களமறுத்து சேர மன்னன் முதலாம் பாஸ்கர ரவிவர்மனை வெற்றிக் கொண்டதை நினைவு கூறும் வகையில் இவ்வாயில் அமைந்துள்ளது.
இவ்வாயில் 3 அடுக்குகளையும் 90 அடி உயரமும் கொண்டு அழகிய வேலைபாடுகளை உடைய இந்த பிரம்மாண்ட கேரளாந்தகன் நுழைவு வாயிலை கடந்தும் சென்றதும் இராசராசன் நுழைவு வாயில் உள்ளது. இதனை திருமாளிகை நுழைவு வாயில் என்றும் கூறுவர்.
இவ்விரு நுழைவு வாயில்களிலும் மிக பிரம்மாண்டமான துவார பாலகர்கள் உள்ளனர். இதனைக் கடந்து சென்றதும் 500 அடி நீளமும், 250 அடி அகலமும் உள்ள வெளிமுற்றம் உள்ளது. அது கருங்கல்லாலும் செங்கல்லாலும் பரப்பப் பெற்றது.
வெளிமுற்றத்தைச் சார்ந்த நாற்புறமும் திருமதில்களை அடுத்துத் திருச்சுற்று மாளிகைகள் அமைந்துள்ளன. வெளி முற்றப் பிரகாரத்தின் கிழக்கு முதலிய எட்டுத் திசைகளிலும் முறையே இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்னும் அட்ட திக்குப் பாலகர்களின் திருவுருவம் அமைந்த கோயில்கள் விளங்குகின்றன. இங்குள்ள திக்குப் பாலகர்கள் திருவுருவம் கருங்கல்லில் செதுக்கப்பெற்றவை.
பரந்தவெளி முன் பெரிய மேடை ஒன்று அமைந்துள்ளது. அம்மேடைமீது மேற்கு நோக்கியவாறு நந்தி உள்ளது. நந்திக்கு எதிர் முகமாகக் கிழக்கு நோக்கிய வண்ணம் பெருவுடையார் சந்நிதி உள்ளது. பெருவுடையாராகிய சிவலிங்கப் பெருமான் எழுந்தருளிய கருவறை, அதனை அடுத்து உள்ளே சுற்றி வரும் பிரகாரம் அமைந்துள்ள அர்த்தமண்டபம்.
இரு பக்கமும் தூண்களும் வெளிவாசல்களும் உள்ள மகா மண்டபம், தென்பகுதியில் தியாகராசர் சந்நிதியுள்ள தபந மண்டபம், நர்த்தன மண்டபம், வாத்திய மண்டபம் என்ற ஆறு பகுதிகளையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு மண்டப வாயில்களின் இரு மருங்கிலும் துவார பாலகர்கள் இருக்கின்றனர்.
ஒவ்வொரு துவார பாலகரும் 18 அடி உயரமும் 8-அடி குறுக்களவும் கொண்டு கருங்கல்லால் அழகுடன் அமைந்ததாகும். கோவில் உள்வாயிலாகிய கருவறை வாசலில் திருவணுக்கன் திருவாயில் எனப்படும்.
பெருவுடையார் சந்நிதியை அடைய நேர் சந்நிதி வழியோடு, விமானத்தை அடுத்த மகாமண்டபத்தின் தென் புறத்திலும் வடபுறத்திலும் பழங்காலப் படிக்கட்டுகளுடன் வாயில்கள் உள்ளன. முன்னாளில் இவ்வாயில்களின் வழியே தான் சுவாமி சந்நிதியை அடைவது வழக்கம் தெற்கு வாயில் விக்கிரமன் திருவாசல் எனப்படும். தெற்கு வடக்கு வாயில்களின் படிக்கட்டுகள் கோயில் எடுப்பித்த காலத்தே அமைந்தவை என்பர்.
தெற்கு வடக்கு வாயில்களின் மேற் பகுதிகளில் முறையே சூரியனும் சந்திரனும் உள்ளனர். அத்தெற்கு வடக்கு வாயில்களின் கீழ்ப் பகுதிகளில் முறையே இலக்குமியும் சரசுவதியும் உள்ளனர்.
பெருவுடையார் சந்நிதியின் முன் மண்டபமாகிய வாத்திய மண்டபத்தின் முன்பகுதியில் இப்பொழுது படிக்கட்டுகள் அமைந்துள்ளன. இப்படிக்கட்டுகள் பிற்காலத்தே மராட்டிய மன்னரால் கி.பி.1803-இல் அமைக்கப்பெற்றவை என்பர். நேர்முகமாகச் சந்நிதியை அடையும் இப்படிக்கட்டுகள் உள்ள முதல் வாயிலின் தென் பக்கம் விநாயகரும், வட பக்கம் துர்க்கையும், துர்க்கைக்கு முன்னே பைரவரும் சனிபகவானும் எழுந்தருளியுள்ளனர்.
பெருவுடையார் மூலத்தானத்தை அடுத்த அர்த்த மண்டப இடையில் அமைந்த உள் அறைத் திருச்சுற்று மாளிகையின் சுவர்களில் சுமார் 930 ஆண்டுகள் மறைபட்டிருந்த ஒன்றின் மேல் ஒன்றான இரு அரிய வண்ணச் சித்திரங்கள் உள்ளன. மேலுள்ள ஓவியங்கள் நாயக்கர் காலத்திலும், மறைந்திருக்கும் ஓவியங்கள் சோழர் காலத்திலும் தோன்றியவை என்பர். தற்போது சுந்தரர் வரலாற்றின் ஓவியங்களும் பிற ஓவியங்களுமே காணக் கிடைக்கின்றன. வெளி முற்றத்தின் நடுவில் உயர்ந்த மேடையில் பெருவுடையார் திருக்கோயில் நிறுவப் பெற்றுள்ளது. அது மாடக்கோயில் இலக்கணப்படி அமைந்துள்ளது.
பெருவுடையார் (பிரகதீஸ்வரர்) எழுந்தருளிய கர்ப்பக்கிரகத்தின் மேலே உள்ள கோயில் விமானம் சதுர வடிவானது. அதன் அடித்தளம் 96 அடி சதுரம். விமானம் அடிபருத்தும் நுனி சிறுத்த அமைப்பினைக்கொண்டது. 14 அடுக்குகள் கொண்டு 216 அடி உயர்ந்து நிற்பது. விமானத்தின் உச்சியும் கலசத்தின் அடிப்பாகமும் உருளடை வடிவாய் அமைந்துள்ளது.
விமான உச்சியில் பிரமாந்திர தளத்தில் போடப்பட்ட கருங்கல் ஒரே கல். அது 25 1/2 அடி சதுரம். 80 டன் எடையும் உள்ளது என்பர். இக்கல் அழகி என்னும் நரை மூதாட்டியால் கொடுக்கப் பெற்றது என்பர்.
தூபித் தறியில் வைக்கப் பெற்றுள்ள செப்புக்குடம் 12 1/2 அடி உயரமும் 3083 பலம் நிறையும் உடையது. அக்குடத்தின் மேல் போர்த்துள்ள பொற்றகடு 2926 1/2 கழஞ்சு நிறையுள்ளது (கழஞ்சு-12 பணவெடை கொண்ட நிறை) பிரமாந்திரத்தளக் கல்லின் நான்கு மூலைகளிலும் முறையே இரண்டிரண்டு நந்திகள் அமைந்துள்ளன. அவை ஒவ்வொன்றும் தனித்தனி 6 1/2 அடி நீளமும் 5 1/2 அடி அகலமும் உள்ளது.
இந்நந்திகளைச் சற்று ஒத்த நந்திகள் அம்மன் கோவிலுக்கு எதிரிலுள்ள திருச்சுற்று மாளிகையில் இருப்பதைக் கண்டு மகிழலாம். விமானத்தின் தென்புறம், மேல்புறம், வடபுறம் இவற்றில் பற்பல சிவமூர்த்தங்களின் உருவங்களும், சரித்திர சம்பந்தமான உருவங்களும் அமைந்துள்ளன. இப்பெரிய கோவில் கர்ப்பக்கிரக விமானம் தட்சிணமேரு எனப்படும். இதனை உத்தம விமானம் என்றும் கூறுவர்.
பெரியகோவில் கர்ப்பக்கிரகத்தில் எழுந்தருளிய சிவலிங்கத் திருமேனி மிகப் பெரியது. இது நர்மதை நதி தீரத்ததிலிருந்து இராசராசனால் கொண்டுவரப்பெற்றது என்பர்.
இச்சிவலிங்க மூர்த்தி சுமார் மொத்தம் 16 அடி உயரம். பாணம் (உருத்திரபாகம்) 9 அடி உயரமும், பிரம்ம விஷ்ணு பீடங்கள் சேர்ந்த ஆவுடையார் 7 அடி உயரமும் ஆக 16 அடி உயரம் ஆகும். பாணத்தின் சுற்றளவு சுமார் 28 அடியும், ஆவுடையார் சுற்றளவு சுமார் 58 அடியும் உடையது.
இச்சிவலிங்கத் திருமேனியைக் காட்டிலும் பெரியதொரு சிவ லிஙகத்திருமேனி எங்கும் இல்லை. இறைவன் சந்நிதிக்கு எதிரே கொடிமரத்தின் முன் பெரிய மேடையின் மீது உயர்ந்ததோர் மண்டபத்தில் பெரிய நந்தி திகழ்கின்றது.
இந்த நந்தி 25 டன் நிறையும்,12 அடி உயரமும், 19 1/2 அடி நீளமும், 8 1/4 அடி அகலமும் கொண்ட ஒரே கருங்கல்லில் செதுக்கப் பெற்றது. இக்கருங்கல் திருச்சிராப்பள்ளியின் வடக்கே உள்ள பெரம்பலூருக்கு அருகில் உள்ள பச்சைமலையிலிருந்து கொண்டுவரப் பெற்றது என்பர்.
பெரிய நந்தி இருக்கும் உயர்ந்த மண்டபம் நாயக்க மன்னர்களால் கட்டப் பெற்றது. நந்தி மண்டபத்தின் கீழ்ப் பகுதியில் பலிபீடம் உள்ளது. இதற்குக் கிழக்குப் பகுதியில் அமைந்த மேடை குறவஞ்சி மேடை என்பர். இம் மேடை ஆடவல்லான் சந்நிதிக்கு நேரே அமைந்துள்ளது.
வெளிமுற்றத் திருச்சுற்றின் தென்மேற்கு மூலையில் விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவில் கி.பி.1803ல் இரண்டாம் சரபோஜி மன்னன் கட்டியது என்பர் இக்கோயில் கட்டும்முன் பரிவார ஆலயத்து விகாயகரே முதன்மையாக இருந்தார் என்பர்.
வெளி முற்றத் திருச்சுற்றின் வடமேற்கில் ஆறுமுகக் கடவுள் வள்ளி தேவயானை சமேதராக எழுந்தருளிய ஆலயம் ஒன்று உள்ளது. இது யானை குதிரைகள் பூட்டிய இரதம் போல அமைந்துள்ளது. மிக நுட்பமான சிற்பங்களோடு சிறந்து திகழ்கிறது.
முருகன் சன்னதியில் இடப்பக்கம் திரும்பிய மயில் மீது திருவாசியுடன் எழுந்தருளிய ஆறுமுகக் கடவுள் ஒரே கருங்கல்லில் மிக அழகுடன் செதுக்கப்பெற்றுள்ளது. இக்கோவிலின் வாயிற்படியிலுள்ள துவாரபாலகர் இருவரின் உருவம் மிக அழகுடையது. இக்கோவில் கி.பி.17-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆட்சிபுரிந்த நாயக்கமன்னரால் கட்டப்பெற்றது.
வெளிமுற்றத் திருச்சுற்றின் வடகிழக்கு மூலையிலுள்ள ஒரு தனி மண்டபத்தில் சிவகாமி அம்மையோடு நடராசப் பெருமான் எழுந்தருளிய சந்நிதி உள்ளது. இம்மூர்த்தி பஞ்ச லோகத்தால் அமைந்தது மிக வனப்பு வாய்ந்தது. கருவூர் தேவர் உடனிருந்து இம்மூர்த்தியை வார்ப்பித்தார் என்பர் இம்மூர்த்திக்கு ஆடவல்லான் என்ற ஒரு திருநாமமும் உண்டு, இம் மூர்த்திக்கு மார்கழித் திருவாதிரை மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பெருவுடையார் சந்நிதியின் நேரே அடுத்துள்ள தபந மண்டபத்தின் தென்பகுதியில் கிழக்கு நோக்கியவாறு தியாகராசப் பெருமான் (சோமாஸ்கந்தமூர்த்தி) எழுந்தருளியுள்ளார். இவர்க்குத் தஞ்சை விடங்கர் என்று இராசராசன் பெயர் சூட்டினான்.
திருவாரூர் தியாகராசப் பெருமானிடம் இராசராசன் கொண்ட பேரன்பினால் இங்கும் தியாகராசரை எழுந்தருளச் செய்து வழிபட்டான் என்பர். திருவாரூர் தியாகராச பெருமானுக்கு என்னென்ன சிறப்பு உற்சவங்கள், வாத்தியங்கள் உள்ளனவோ அவ்வளவும் தஞ்சை விடங்கர்க்கும் உள்ளன.
திருவாரூரில் தியாகராசாவுக்குப் பூசை நடந்த பின்னரே மூலத்தான மூர்த்திக்குப் பூசை நடைபெறும். அதுபோல் தஞ்சையிலும் விடங்கர்க்குப் பூசை நடந்தபிறகே பெருவுடையார்க்குப் பூசை நடைபெறுகிறது தியாகராசப் பெருமான் சந்நிதி எதிரே இராசராசசோழன் விக்கிரகம் சிறப்புடன் உள்ளது. தபந மண்டபத்தின் வடபகுதியில் சந்திரசேகரர் முதலிய உற்சவ விக்கிரகங்கள் பல காட்சியளிக்கின்றன.
பரந்தவெளிமுற்றத் திருச்சுற்றின் தென் பகுதியிலே கோவில் விமானத்தை அடுத்த தெற்கு வாயிற்படியின் மேற்குப் பகுதியில் அடிவிமானத்தைச் சார்ந்த உயரமான இடத்தில் தட்சிணாமூர்த்தி சந்நிதி உள்ளது. இச்சந்நிதிக்கு இரண்டாம் சரபோஜி மன்னன் படிக்கட்டுகள் எடுப்பித்துச் சிறப்பித்தான் என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது.
வடக்கு வெளிமுற்றத் திருச்சுற்றில் பெருவுடையார் ஆலயத்தின் முதல் மண்டப படிக்கட்டுகளுக்கும் பெரிய நந்திக்கும் இடையிலுள்ள பகுதியிலே அபமன் ஆலயம் தனியே உள்ளது பல மண்டபங்களை உடையது. இவ்வாலயம் தெற்கு நோக்கிய சந்நிதி ஆகும். அம்மையார் உருவிற் பெரியதாய் மிக வனப்போடு அருள் சுரக்கும் திருக்கோலத்துடன் விளங்குகின்றார்.
தென்மேற்கே வெளிமுற்றத் திருச்சுற்றின் தொடக்கத்தில் பரிவார ஆலய விநாயகர் சன்னதி உள்ளது. இவர் இப்பெரிய கோவில் கட்டுமுன் இருந்த முதல் மூர்த்தி ஆவர் தென்மேற்கிலிருந்து தொடர்ந்து வடகிழக்கு மூலைவரையிலுள்ள திருச்சுற்று மாளிகையில் சுமார் 252 சிவலிங்கங்களும் நவக்கிரசு லிங்கங்களும் பிற மூர்த்திகளும் உள்ளனர். மேற்குத் திருச் சுற்று மாளிகைச் சுவரில் தொடங்கி மதுரை 64 திருவிளை யாடல்களின் நிகழ்ச்சிகள் வர்ணத்தால் சித்தரித்துள்ளன. இங்குள்ள லிங்கங்கள் மராட்டிய மன்னர் காலத்தில் பிரதிட்டை செய்யப் பெற்றன.
வெளிமுற்றத் திருச்சுற்றின் வடபாரிசத்தில் பெருவுடையார் ஆலயக் கோமுகத்தின் சற்றுக் கீழ்பால் உயர்ந்த பாகத்தில் சண்டேசுவரர் ஆலயம் உள்ளது. இஃது இராசராசனால் கட்டப் பெற்றது. இம்மூர்த்தியே சிவாலயச் சொத்துக்களை முதன்மையாகக் கண்காணிப்பவர். இவரை கோவில் கண்காணியாளர் எனக் கூறுவர்.
வெளிமுற்றத் திருச்சுற்றின் மேற்கில் அதாவது பெருவுடையார் கோவிலுக்குப் பின் பக்கத்தில் ஒரு மேடைமீது கருவூர்த் தேவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு வியாழன் தோறும் சிறப்புப் பூசனையும் பிரார்த்தனைகளும் நடக்கின்றன இவரே பெருவுடையார்க்கு அட்டபந்தன மருந்து சாற்றி சிறப்பித்தவர் ஆவர்.
தஞ்சைப் பெரியகோவிலில் எழுந்தருளியுள்ள சிவலிங்கமூர்த்தி பெருவுடையார், தட்சிணமேருவிடங்கர், இராசராசேச்சுவரமுடையார் எனவும், தியாகராசப் பெருமான் தஞ்சையிடங்கர் எனவும், நடராசப் பெருமான் ஆடவல்லான் எனவும், அம்மையார் பெரியநாயகியம்மை, உமாபரமேசுவரி, உலகமுழுதுடையாள் என வழங்கப்பெறுவர். வடமொழியில் சுவாமியை பிரகதீசுவரர் என்றும், அம்மையை பிரகந்நாயகி என்றும் கூறுவர்.
வன்னி மரம் தலவிருட்சம் ஆகும். தீர்த்தம் - சிவகங்கை, தேரைத்தீர்த்தம். சிவகங்ககை தீர்த்தம் பெருவுடையார் ஆலயத்திற்கு வடபால் உள்ளது.
பெருவுடையாருக்கு நித்திய பூசை, நைமித்திக பூசை, உற்சவங்கள் முதலியன மகுடாகமம் என்னும் முறைப்படி நடைபெறுகின்றன.
காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரை
மாலை 4 மணி முதல் 8.30 மணி வரை
இக்கோவில் யுனெஸ்கோவின் (UNESCO) உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.