காட்பாடி காங்கேயநல்லூர் கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவதரித்த திருத்தலம் ஆகும். இங்குள்ள கோவில் கோபுரத்தின் உச்சியில் இருந்து தவறி விழுந்த மைந்தனுக்கு உயிர் வழங்கிய புனித தலமாகும். இங்கு லட்சதீப திருவிழா நேற்று நடந்தது. பகல் 2 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு மகா தீபாராதனையும், லட்ச தீபக்காட்சியும் நடந்தது. ஏராளமான பெண்கள் கோவில் வளாகத்தில் உள்ளே நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
வள்ளி, தெய்வானையுடன் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்ட தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமியை வழிபட்டனர். மாலை 6 மணிக்கு திருப்புகழ், 7 மணிக்கு வாரியார் சுவாமிகளின் தம்பி மகன் வாதவூரனின் செஞ்சொல் விரிவுரை நிகழ்ச்சியும், இரவு 7.30 மணிக்கு டி.வி. நடிகர்களின் நகைச்சுவை நிகழ்ச்சியும் நடந்தது.
விழாவில் ஓட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால், வாரியார் சுவாமிகளின் தம்பி மகன் புகழனார், மாநகராட்சி சுகாதார குழு முன்னாள் தலைவர் ரமேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காட்பாடி இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.