பழனி அடிவாரம் வடக்கு கிரிவீதியில், பழனி முருகன் கோவிலின் உபகோவிலான அழகுநாச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று வருடாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணிக்கு அழகுநாச்சியம்மன் கோவில் வளாகத்தில் கலசபூஜை மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது.
முன்னதாக புண்ணியாக வாஜனம், விநாயகர் பூஜை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு 16 வகை அபிஷேகங்களும், கலச அபிஷேகமும் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சி உபயதாரர்கள் கந்தவிலாஸ் செல்வகுமார், நவீன்விஷ்ணு, கோவில் கண்காணிப்பாளர்கள் முருகேசன், சண்முகவடிவு மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.