ஆன்மிகம்

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் கலிவேட்டை

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்வான கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது.

மாலை மலர்

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-வது திருவிழாவான நேற்று அய்யா வைகுண்டர் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு அய்யாவுக்கு பணி விடையும் நடைபெற்றது.

மாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா வைகுண்டர் வீற்றிருக்க கலிவேட்டை நிகழ்ச்சி தொடங்கியது. இதற்கு பூஜிதகுரு சுவாமி தலைமை வகித்தார். பூஜித குரு பாலபிரஜாபதி அடிகளார், குரு பொறுப்பு வகிக்கும் பூஜித குரு பையன் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வெள்ளை குதிரை வாகனம் தலைமைப்பதியை சுற்றி வந்து வடக்கு வாசல் வழியாக வடக்கு ரத வீதியை அடைந்தது. பின்னர் ரத வீதியை சுற்றி புகழ் பெற்ற முத்திரி கிணற்றங்கரையை அடைந்தது. அங்கு திரளான அய்யாவழி பக்தர்கள் முன்னிலையில் கலிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்கள் அய்யா சிவ சிவா, அரகரா அரகரா என்று பக்தி கோஷமிட்டனர்.

அதைத்தொடர்ந்து வாகனம் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று விட்டு தலைமைப்பதியை வந்தடைந்தது. இரவு 11 மணிக்கு தலைமைப்பதி வடக்கு வாசலில் அய்யா பக்தர்களுக்கு தவக்கோலத்தில் காட்சியளித்தார். கலிவேட்டை நிகழ்ச்சியில் பல மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

28-ந்தேதி பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.