சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் 
ஆன்மிகம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் தேரோட்டம் இன்று நடக்கிறது

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் மார்கழி 10 நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடக்கிறது.

மாலை மலர்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோன்று இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனியும், சப்பர ஊர்வலமும், சமய சொற்பொழிவும், பக்தி இன்னிசைமற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. 3-ம் திருவிழாவன்று மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் வேளிமலை முருகன், மருங்கூர் சுப்பிரமணியசாமி, கோட்டார் வலம்புரிவிநாயகர் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் தங்களது தாய் தந்தையர் இல்லத்தில் நடைபெறும் திருவிழாவை காண சுசீந்திரத்தில் தங்கி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர்.

5-ம் நாள் திருவிழாவன்று கருடதரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. 9-ம் திருவிழாவான இன்று (வியாழக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதர் பிட்சாடனராக வீதியுலா வரும் நிகழ்ச்சியும், காலை 7.45 மணிக்கு மேல் சாமியும் அம்பாளும், அறம்வளர்த்த நாயகி, விநாயகர் ஆகியோர் கோவிலில் இருந்து வாகனங்களில் புறப்பட்டு தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

பெரிய தேரில் சாமியும், அம்பாளும், அம்மன் தேரில் அறம்வளர்த்த நாயகியும், சிறிய தேரில் விநாயகரும் எழுந்தருளுவார்கள். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருவார்கள். மூன்று தேர்களும் நான்கு ரதவீதிகள் வழியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்த பின்பு வெடிமுழக்கத்துடன் தேர்கள் நிலைக்கு வந்து நிற்கும். அதன்பின்னர் சாமிகளுக்கு அலங்கார தீபாராதனை நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனம் ஆகிய திருவாதிரை களி விழாவும் நடக்கிறது. தேரோட்டத்தைக் காண குமரிமாவட்டம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரள பக்தர்களும் இன்று சுசீந்திரத்திற்கு வருகை தருவார்கள். இதையொட்டி இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தெப்பக்குளத்தில் தீயணைப்பு துறை சார்பில் பைபர் படகுமூலம் வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் துப்புரவு பணிகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் குமரிமாவட்டம் முழுவதும் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை குமரிமாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் குமரி மாவட்ட அறங்காவலர் குழுவினரும், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்களும், ஊர்பொதுமக்களும் இணைந்து செய்து வருகின்றனர்.