பக்தர்கள் வெள்ளத்தில் தாணுமாலயசாமி தேர் மிதந்து வந்த கண்கொள்ளா காட்சி. 
ஆன்மிகம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா தேரோட்டம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாலை மலர்

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்தகோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் 10 நாட்கள் பெருந்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

9-ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கங்காள நாதர் உலா வந்தார். காலை 7.15 மணியளவில் சாமியும், அம்பாளும் தட்டு வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் பவனி வந்து மீண்டும் கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. காலை 7.45 மணிக்கு அம்பாளுடன், சாமியையும், அறம்வளர்த்த நாயகி அம்மனையும், விநாயகரையும் தனித்தனியாக வாகனங்களில் எழுந்தருளச் செய்து மலர்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க எடுத்து வந்தனர். அம்பாளுடன்கூடிய சாமியை சாமித்தேரிலும் (பெரிய தேர்), அறம்வளர்த்த நாயகி அம்மனை அம்மன் தேரிலும், விநாயகரை பிள்ளையார் தேரிலும் எழுந்தருள செய்தனர்.

பின்னர் தேர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தேரின் வலதுபக்க சக்கரத்தில் சந்தனம் தெளித்தும், தேங்காய் உடைத்தும், மாலை அணிவித்தும் தீபாராதனை காட்டப்பட்டது.

காலை 8.25 மணியளவில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. முதலில் விநாயகர் தேர் இழுக்கப்பட்டது. தொடர்ந்து சாமித்தேர், அம்மன்தேர் இழுக்கப்பட்டன. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வந்தனர். தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக சுசீந்திரத்தில் குவிந்தனர். இதனால் கோவிலைச் சுற்றியுள்ள நான்கு ரதவீதிகளிலும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் வெள்ளமாகவே காட்சியளித்தது.

பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்ததேர்கள் நான்கு ரதவீதிகளை சுற்றி வந்த பிறகு நண்பகல் 11.30 மணிக்கு வெடி முழக்கத்துடன் பெண்கள் குலைவை இட நிலைக்கு வந்து சேர்ந்தன. தொடர்ந்து சாமி அம்பாள், அறம்வளர்த்தநாயகி அம்மன், விநாயகர், போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கோவிலுக்குள் சென்றது. தேரோடும் ரதவீதியில் பக்தர்களுக்கு பானக்காரம், மோர், பழம், தண்ணீர் மற்றும் அன்னதானம் போன்றவை பல்வேறு அமைப்புகளிலிருந்தும் வழங்கப்பட்டன.

தேர் நிலைக்கு நின்றதும் ஏராளமான பக்தர்கள் அருகில் உள்ள சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் இரவில் மீண்டும் சுசீந்திரம் கோவிலுக்கு வந்தனர். அதன் பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ணத்தை முன்னிட்டு ரிஷப வாகனத்தில் தாணுமாலயசாமியும், அன்ன வாகனத்தில் அறம்வளர்த்த நாயகி அம்மனும், கருட வாகனத்தில் திருவேங்கட விண்ணவரம்பெருமாளும் வீதிஉலா வந்து கோவிலை வந்தடைந்தனர். அதன் பின்னர் மருங்கூர் முருக பெருமானும், கோட்டார் ஏழகரம் வலம்புரி விநாயகரும், வேளிமலை குமாரசாமியும் எதிரெதிரே காட்சி அளிக்க அனைத்து தெய்வங்களுக்கும் ஒன்றுபோல் தீபாராதனை நடந்தது.

அப்போது இரு முருகப்பெருமானும், வலம்புரிவிநாயகரும் தாணுமாலயசாமியை வலம்வந்து எதிரே நிற்க தாணுமாலய சாமி ரிஷப வாகனத்தில் அமர்ந்து அவர்களை விட்டுப்பிரிய மனமில்லாமல் கோவில் சன்னிதானத்தில் முன்னும் பின்னும் அசைந்து அசைந்து செல்வதும், பின்னர் திரும்புவதுமாக பலமுறை நடந்தது. இந்த காட்சியை கண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பெண்கள் குலவையிட்டு மங்கல ஒலி எழுப்பிட பின்னர் மேளதாளம் முழங்க மூன்று வாகனங்களில் இருந்த சாமிகளும் கோவிலைச் சென்றடைந்தனர்.

``சப்தாவர்ணம் தொழுதால் மோட்சம் கிடைக்கும்’’ என்பது பழமொழி. சப்தம் என்றால் 7 என்று பொருள். மும்மூர்த்திகள் மூன்றும் முன்னும் பின்னுமாக 7 முறை சென்றுவருவதால் ‘சப்தாவர்ணம்’ என்று பெயர். அது நாளடைவில் சப்தாவர்ணமாக மாறியது. சப்தாவர்ணகாட்சியை காண வந்த பக்தர்கள் பலரும் இரவு கோவிலிலேயே தங்கினர். இதனையடுத்து அதிகாலை நடந்த ஆருத்ரா தரிசனத்தை கண்டு களித்தனர். பின்னர் பக்தர்கள் திருவாதிரை களியினை உண்டு தாணுமாலயசாமியை தரிசனம் செய்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில் நிர்வாகமும், அறங்காவலர் குழுவினரும், பக்தர்களும், ஊர் பொதுமக்களும் இணைந்து செய்திருந்தனர்.