ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாரிவேட்டை நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் உற்சவர் நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் பாரிவேட்டை வைபவம் கண்டருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் நாட்களில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சிறப்பு வைபவங்களும், புறப்பாடுகளும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் சங்கராந்தி மண்டபம் சென்று வந்தார்.

மாட்டுப் பொங்கலையொட்டி நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கனுமண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு சிறப்பு திருவாராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மதியம் 1 மணியளவில் தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு பாரிவேட்டை நடத்தியபடி தெற்குவாசல் கடைவீதிகளில் உலா வந்தார், பின்னர் 2 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

நம்பெருமாள் பாரிவேட்டை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனி வாசன், இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் அர்ச்சகர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT