ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் - சேரகுலவல்லி தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றபோது எடுத்த படம். 
ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் - சேரகுலவல்லி தாயார் சேர்த்தி சேவை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் - சேரகுலவல்லி தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குலசேகர ஆழ்வார் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பெருமாள் திருமொழி என்ற பகுதியை பாடியுள்ளார். குலசேகர ஆழ்வார் மன்னராக இருந்த போதிலும் பெருமாள் மீது கொண்டிருந்த பக்தி காரணமாக தனது ஒரே மகளான சேரகுலவல்லியை ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு திருமணம் செய்து வைத்தார். அன்று முதல் சேரகுலவல்லி ரெங்கநாதரின் நாயகிகளில் ஒருவராக வணங்கப்பட்டு வருகிறார். இவருக்கு பெரிய சன்னதியின் 2-ம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தின் மேற்கு பகுதியில் சன்னதி உள்ளது.

குலசேகர ஆழ்வார், சேரகுலவல்லியை பெருமாளுக்கு ராமநவமி நாளில் திருமணம் செய்து கொடுத்ததாக ஐதீகம். இதனால் ஆண்டு தோறும் ராமநவமி அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் - சேரகுலவல்லி தயார் திருக்கல்யாண உற்சவம் எனப்படும் சேர்த்தி சேவை நடைபெறும்.

இந்த ஆண்டு ராமநவமி உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைந்தார். 9.30 மணி முதல் பகல் 12 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் நம்பெருமாள் சேரகுலவல்லி தாயாருடன் பகல் 1.30 மணி முதல் மாலை 5 மணி வரை சேர்த்தி சேவை கண்டருளினார்.

மாலை 5.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6.15 மணிக்கு கோடை நாலுகால் மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு உள்கோடை மண்டபத்திற்கு இரவு 7.45 மணிக்கு வந்தடைந்தார். பின்னர் இரவு 9.15 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். 

SCROLL FOR NEXT