திருப்பைஞ்சீலி சிவன் கோவிலில் நேற்று சித்திரை தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம். 
ஆன்மிகம்

திருப்பைஞ்சீலி சிவன் கோவிலில் சித்திரை தேரோட்டம்

திருப்பைஞ்சீலி சிவன் கோவிலில் சித்திரை தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

மாலை மலர்

அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் பாடப்பெற்ற ஸ்தலம் திருப்பைஞ்சீலி சிவன் கோவில். எமதர்மனுக்கு அதிகாரம் வழங்கிய ஸ்தலமாகவும், திருமணத்தடை நீங்க கல்வாழை பரிகாரம் செய்யும் சிறப்புப் பெற்ற ஸ்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரு விழாவை முன்னிட்டு சுவாமி விழா நாட்களில் சிம்ம வாகனம், யாளி வாகனம், பூத வாகனம், கைலாச வாகனம், காமதேனு வாகனம் ஆகியவற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடந்த 4-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும், 5-ந் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடந்தது.

நேற்று காலை 6.15 மணியளவில் திருத்தேரில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளினார். மதியம் 2.45 மணியளவில் திருப்பைஞ்சீலி, ஈச்சம்பட்டி, வால்மாழ்பாளையம், கவுண்டம்பட்டி, மூவராயன்பாளையம் உள்பட பல்வேறு கிராம மக்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. தேர் கோவிலைச் சுற்றி வந்து பின்னர் நிலையை அடைந்தது.

இன்று நடராஜர் புறப்பாடும், தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. நாளை(புதன்கிழமை) முத்துபல்லக்கும், 11-ந் தேதி பஞ்சபிரகார புறப்பாடும் நடைபெறவுள்ளது. 21-ந் தேதி விடையாற்றி வைபவம் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஹேமலதா தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். தேரோட்டத்தை யொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் நடைபெற்றது. தண்ணீர் பந்தல் அமைத்து பக்தர்களின் தாகம் தீர்க்கப்பட்டது.