சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரில் சிறப்பு அலங்காரத்தில் பக்தோசித பெருமாள் எழுந்தருளினார். பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் சன்னதி வீதி, சுப்பாராவ் வீதி, பைராகி மடம், அஞ்சலக வீதி வழியாக சென்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் தேர் மீது உப்பு, மிளகு போன்றவற்றை வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல காந்தி சாலை அருகே முன்னாள் பேரூராட்சி தலைவர் விஜயன், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
விழாவையொட்டி அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், சோளிங்கர் இன்ஸ்பெக்டர் காண்டீபன், சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஏற்பாடுகளை வேலூர் தக்கார் அசோக்குமாரும், செயல் அலுவலர் சுப்பிரமணியமும் செய்திருந்தனர்.