ஆன்மிகம்

சந்திரனை தலையில் சூடிய சிவன்

தட்சனின் சாபத்தால் சந்திரன் மெல்ல மெல்ல பொலிவிழந்து தேயத் தொடங்கினான். இதனால் வருத்தம் அடைந்த சந்திரன், தன்னை காக்கும்படி சிவபெருமானிடம் தஞ்சம் அடைந்தான்.

மாலை மலர்

ஆதியும், அந்தமும் இல்லாத முழுமுதற் கடவுளாக போற்றப்படுபவர் சிவபெருமான். இவர், உடல் முழுவதும் திருநீறு, கழுத்தில் பாம்பு, நெற்றிக்கண், நீலகண்டம், கையில் திரிசூலம், உடுக்கை, ஜடாமுடியில் கங்கை, பிறை நிலா என காட்சி தருகிறார். இவர் உலக உயிர்களுக்கு குளிர்ச்சியை தரும் சந்திரனை (நிலா) தலையில் சூடியுள்ளதற்கு சில புராணக்கதைகளும் கூறப்படுகின்றன.

தட்சனின் 27 மகள்களையும் (நட்சத்திரங்கள்) சந்திர பகவான் மணந்து கொண்டார். இருப்பினும் அவர்களுள் ரோகிணியிடம் மட்டுமே சந்திரன் அதிக அன்பு செலுத்தினான். இதனால் வருத்தம் கொண்ட மற்ற 26 மகள்களும், தன் தந்தையான தட்சனிடம் சென்று முறையிட்டனர். இதனால் கோபம் கொண்ட தட்சன், சந்திரன் தன் பொலிவை இழக்கட்டும் என சாபம் இட்டார்.

தட்சனின் சாபத்தால் சந்திரன் மெல்ல மெல்ல பொலிவிழந்து தேயத் தொடங்கினான். இதனால் வருத்தம் அடைந்த சந்திரன், தன்னை காக்கும்படி சிவபெருமானிடம் தஞ்சம் அடைந்தான். இதையடுத்து சந்திரன் முழுமையாக அழியாமல் இருக்க சிவபெருமான் தன் தலையில் சூடி கொண்டார். இதன் விளைவாகவே தேய்பிறை - வளர்பிறை சுழற்சி ஏற்படுவதாக கூறப்படுகிறது.

மற்றொரு புராணக்கதைபடி, ஒரு முறை தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலை கடைந்தபோது, அதிலிருந்து ஆல கால விஷம் வெளிப்பட்டது. மிகவும் கொடிய அந்த விஷத்தால் உலக உயிர்கள் அனைத்தும் துன்பப்பட்டன. இதனால் தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் என அனைவரும் சிவபெருமானை வேண்டி நின்றனர். சிவபெருமான் ஆலகால விஷத்தை பருகி உலக உயிர்களை காத்தார்.

ஈசன் அருந்திய நஞ்சின் வெப்பத்தை தணிக்க தேவர்கள் அனைவரும் முயற்சி செய்தனர். அப்போது குளிர்ச்சிக்கு அதிபதியான சந்திரன், நஞ்சின் வெப்பத்தை தணிக்க தன்னை சூடி கொள்ளும்படி வேண்டினான். அதன்படியே சிவபெருமான் சந்திரனை தலையில் சூடி கொண்டதாகவும் கூறப்படுகிறது.