ஆன்மிகம்

பார்வதியை சமாதானம் செய்யும் சிவன்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமீயச்சூர் மேகநாதர் கோவில் திகழ்கிறது.

சூரியனின் ரதத்தை செலுத்துபவர், அருணன். இவர் உடல் குறைபாடு உள்ளவர். அருணனுக்கு திருக்கயிலை சென்று, சிவ-பார்வதியை தரிசிக்க வேண்டும் என்பது விருப்பம். அதை சூரியனிடம் சொன்னபோது, அனுமதி மறுத்ததுடன், ஊனமான காலை சுட்டிக்காட்டி ஏளனமும் செய்தார். இதனால் ஆத்திரம் கொண்ட சிவ பெருமான், சூரியனின் ஒளியை பறித்தார்.

தன் தவறை உணர்ந்த சூரியன், கயிலாயம் வந்து சிவ-பார்வதியை வணங்கி சாப விமோசனம் கேட்டார். அப்போது ஈசன், "என்னையும், உமையவளையும் யானை மீது வைத்து, மேக மண்டலத்தில் இருந்தபடி ஏழு மாதங்கள் பூஜித்து வா. விமோசனம் கிடைக்கும்" என்றார். அதன்படியே பூஜித்து வந்த சூரியன், ஏழு மாதங்கள் நிறைவடைவதற்கு முன்பாகவே, ஈசனிடம் வந்து “என்னுடைய சாபம் இன்னும் நீங்கவில்லையே” என்று முறையிட்டார்.

இதனால் வெகுண்ட பார்வதிதேவி, “உரிய காலம் வரும்வரை உன்னால் பொறுமை காக்க முடியாதா?” என்றபடி, சாபம் கொடுக்க முயன்றாள். அப்போது ஈசன், பார்வதி தேவியிடம், “தேவி.. ஏற்கனவே நான் அளித்த சாபத்தால் சூரியன் ஒளியை இழந்தான். இதனால் உலகம் இருளில் மூழ்கியுள்ளது. இப்போது நீயும் சபித்து விட்டால், உலக உயிர்களின் துன்பம் மேலும் நீடிக்கும். எனவே சாந்தமாக இரு" என்று கூறினார்.

இந்த தலவரலாறைக் கொண்ட ஆலயமாக, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமீயச்சூர் மேகநாதர் கோவில் திகழ்கிறது. இந்த ஆலய விமானத்தின் கீழே தெற்குப் பகுதியில், மேற்கண்ட சம்பவத்தை நினைவுறுத்தும் வகையில் சிவ-பார்வதி சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தை 'ஷேத்திர புராணேஸ்வரர்' என்கிறார்கள். இதில் சிவபெருமான், தன்னுடைய மனைவியான பார்வதியின் முகவாயை பிடித்து, சாந்தமாக இருக்கும்படி கொஞ்சிக் கேட்கும்படியான சிற்பம் அழகுற அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிற்ப அழகை வேறு எந்த ஆலயத்திலும் காண முடியாது.