சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்ததையும் படத்தில் காணலாம். 
ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு நேற்று இரவு ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் சீர்வரிசை வழங்கப்பட்டது.

மாலை மலர்

சமயபுரம் மாரியம்மனுக்கு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை சமயபுரம் கோவிலில் இருந்து உற்சவர் மாரியம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி நொச்சியம் வழியாக ஸ்ரீரங்கம் வடக்குவாசல் கொள்ளிடக்கரை வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளி அம்பாள் தீர்த்தவாரி கண்டருளினார்.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை சந்திர கிரகணம் என்பதால் மாலை 5 மணியளவில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் இரவு 8 மணிக்குமேல் அம்பாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கருட மண்டபத்தில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், சந்தனம், மஞ்சள், பழவகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அடங்கிய தட்டுகளை அர்ச்சகர்கள்,

ஸ்தலத்தார்கள், அறங்காவலர்கள், அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் தலையில் சுமந்தும், கையில் ஏந்தியவாறும் ஊர்வலமாக புறப்பட்டு மங்கள வாத்தியங்கள் இசைக்க, மேளதாளம் முழங்க, வாண வேடிக்கையுடன் வடக்கு வாசல் வழியாக கொள்ளிடம் ஆற்றில் அம்பாள் எழுந்தருளியிருந்த பந்தலுக்கு வந்தனர். அங்கு சீர்வரிசைப் பொருட்களை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் அலுவலர்களிடம் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அர்ச்சகர்கள், அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் வழங்கினர்.

இதையடுத்து அம்பாளுக்கு ரெங்கநாதர்கோவில் பட்டு வஸ்திரம், மாலைகள் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு மங்களப்பொருட்களுடன் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், அறங்காவலர்கள் ரங்காச்சாரி, டாக்டர் சீனிவாசன், கவிதா, சுழல்முறை அறங்காவலர் வெங்கடேச உத்தமநம்பி ஆகியோர் செய்திருந்தனர்.