சுந்தரமூர்த்தி நாயனாரின் திருமணத்தை வயதான முதியவர் வடிவில் வந்து சிவபெருமான் தடுத்து, அவரை ஆட்கொண்டார். அதன்பின், திருவாரூரில் இருந்தபடி பல்வேறு ஆலயங்களுக்குச் சென்று திருமுறை பாடும் வரத்தை அளித்த சிவபெருமான் சுந்தரரை தனது தோழனாக ஆக்கிக் கொண்டார்.
சுந்தரர் ஒருமுறை திருவாரூர் ஆலயத்திற்குச் செல்லும்போது பரவை நாச்சியாரை கண்டார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, முன்வினை பயனால் காதல் ஏற்பட்டு, இல்லற வாழ்வில் இணைந்தனர். இருவரும் சேர்ந்து தியாகேசப் பெருமானை வழிபட்டு வந்தனர்.
சுந்தரர் சிவாலயங்களை தரிசிக்க யாத்திரை மேற்கொண்டார். பல சிவாலயங்கள் சென்று ஈசனைப் பணிந்து பாடி, தான் வேண்டியவற்றையும், தன் அன்பர்கள் வேண்டியவற்றையும் கேட்டுப் பெற்றார் சுந்தரர்.
ஒரு சமயம், திருவொற்றியூர் ஈசனை வழிபடுவதற்காக வந்தார். அங்கு சங்கிலி நாச்சியார், ஈசனுக்கு பூ கட்டி கொண்டிருந்ததைக் கண்ட சுந்தரர் அவரிடம் காதல் வயப்பட்டார். ஈசனிடம் சென்று சங்கிலியிடம் தனக்காகப் பேசி, சங்கிலியை தனக்கு திருமணம் செய்துவைக்கும்படி வேண்டினார்.
அதற்கு ஒப்புக்கொண்டு ஈசனும் சங்கிலி நாச்சியாரிடம் சென்று, சுந்தரரை மணந்து கொள்ளும்படி கோரிக்கை விடுத்தார்.
இதைக்கேட்ட சங்கிலி நாச்சியார், சுந்தரர் ஏற்கனவே பரவையாரை திருமணம் செய்துள்ளார். நான் எப்படி அவரை திருமணம் செய்ய முடியும் என ஈசனிடம் கேட்டார்.
அதற்கு ஈசன், உன்னை விட்டுப் பிரிந்து செல்லாதபடி சத்தியம் வாங்கிக் கொள் என்றார். இதனால் சுந்தரரை மணக்க சங்கிலி நாச்சியார் சம்மதித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டு திருவொற்றியூரிலேயே தங்கியிருந்து சிவத்தொண்டு செய்து வந்தனர்.
சிறிது காலம் கழித்து திருவாரூரில் நடைபெறும் வசந்த விழாவுக்குச் செல்ல வேண்டும் என சுந்தரர் ஆவல்கொண்டார். அதனால் சங்கிலி நாச்சியாருக்கு கொடுத்த வாக்கை மீறி, ஊர் எல்லையைத் தாண்டிச் சென்றார் சுந்தரர்.
வாக்குறுதியை மீறியதும் அவரது இரண்டு கண்களிலும் பார்வை பறிபோனது. அதன்பின் பல சிவத்தலங்கள் சென்று, பார்வை வேண்டிப் பதிகங்கள் பாடினார் சுந்தரர்.
சுந்தரர் மீது கொண்ட இரக்கத்தால் திருவெண்பாக்கம் என்ற தலத்தில் ஒரு ஊன்றுகோலை கொடுத்தார் சிவபெருமான். அதைப் பெற்றுக்கொண்டு, தன் அடியார்களின் உதவியுடன் பல சிவதலங்களை தரிசிக்கச் சென்றார் சுந்தரர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரை உருகிப் பாடிய சுந்தரருக்கு இடது கண் பார்வையை வழங்கிய ஈசன், திருவாரூரில் வலது கண் பார்வையும் வழங்கினார்.
இதற்கிடையே, சங்கிலி நாச்சியாரை சுந்தரர் திருமணம் செய்தது குறித்து அறிந்த பரவை நாச்சியார், சுந்தரரை தன் மாளிகைக்குள் விட மறுத்தார். பலர் சமாதானம் செய்தும் பலனில்லை. மனம் நொந்த சுந்தரர், தியாகேசப் பெருமானை சரணடைந்து, தனக்காக பரவையாரிடம் தூது செல்லும்படி வேண்டினார்.
அதன்படியே சிவாச்சாரியார் வேடத்தில் சென்று பரவையாரிடம் சமாதானம் பேசினார் சிவபெருமான். அதற்கும் பரவையார் மனம் இரங்கவில்லை.
இதையடுத்து, சுந்தரரிடம் வந்த ஈசன், சுந்தரா, பரவையிடம் சமாதானம் பேசிப் பார்த்தேன். அவள் உன்னை ஏற்க மறுக்கிறாள் என்றார்.
அதைக் கேட்ட சுந்தரர், உங்களை நம்பிய என்னை கைவிடலாமா? பரவையாரிடம் நான் மீண்டும் சேர நீங்களே வழிசெய்ய வேண்டும் எனக் கூறி ஈசன் திருப்பாதங்களில் பணிந்தார்.
அவரது பக்தியை மெச்சிய சிவபெருமான், சுந்தரா, உனக்காக இந்த நள்ளிரவிலும் மீண்டும் நாம் தூது செல்வோம். வருந்த வேண்டாம் என்றார்.
அதன்பின், தன் சுய உருவத்துடன் பூத கணங்கள், தேவர்கள், முனிவர்கள் சூழ வீதியிலேயே நடந்து வந்தார். பரவை நாச்சியாரின் மாளிகை முன்புறம் திருக்கயிலைப் போல காட்சியளித்தது. சிவபெருமானைக் கண்ட பரவை நாச்சியார் ஓடி வந்து அவரது காலில் விழுந்து வணங்கி நின்றார்.
ஈசன், பரவையே, தோழன் என்ற உரிமையோடு சுந்தரன் எம்மை அனுப்பிய காரணத்தினால், மீண்டும் உன் முன் வந்தேன். உனது இல்லத்திற்கு சுந்தரன் மீண்டும் வருதல் வேண்டும். அதுவே எமது விருப்பம் என தெரிவித்தார்.
பெருமானே! தங்கள் திருவடி நோக திருவாரூர் வீதியில் நடந்து வந்ததைக் கண்ட பிறகும் இசையாது இருப்பேனோ? நாங்கள் கூடி வாழ்கிறோம் என கூறினார் பரவை நாச்சியார்.
அவருக்கு அருளாசி கூறிய சிவபெருமான், சுந்தரா நீ உடனே உன் பரவையிடம் செல்வாயாக எனக்கூறிவிட்டு கருவறைக்குள் சென்று மறைந்தார். அதன்பின், சுந்தரரும் பரவையாரும் ஒன்றிணைந்து சிவத்தொண்டுகள் புரிந்து வந்தனர்.