சங்கர நாராயண சுவாமி கோவில் 
ஆன்மிகம்

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா நாளை தொடங்குகிறது

‘சிவனும், விஷ்ணுவும் ஒன்று' என்ற ஒப்பற்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் ஆடித்தபசு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஆலயங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதங்களில் ஆடித்தபசு திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் வரை நடக்கும். ‘சிவனும், விஷ்ணுவும் ஒன்று' என்ற ஒப்பற்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் ஆடித்தபசு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வது வழக்கம்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ஆடித்தபசு திருவிழா நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு ஊரடங்கு அமலில் இல்லாத நிலையில் கொரோனா தொற்று காரணமாக திருவிழாக்கள் நடத்த அரசு வழிகாட்டு முறைகளை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணியில் இருந்து 6.30 மணிக்குள் கோமதி அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் அம்பாள் சிவிகையில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் காலையும், இரவும் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவிழா தொடர்பான சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை முதல் 24-ந் தேதி வரை 12 நாட்களும் காலை 8 மணிக்கு மேல் தான் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதே போல் இரவு 7.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.