பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள். 
ஆன்மிகம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடக்கிறது

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடக்கிறது. இதில் கலந்து கொள்ள பக்தர்கள் குவிந்தனர்.

மாலை மலர்

திருச்சி மாவட்டம், சமய புரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களுள் பூச்சொரிதல் விழா, சித்திரை தேரோட்டம் பிரசித்தி பெற்றதாகும். பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை காலை பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு முறையே பூத வாகனம், அன்னம், ரிஷபம், யானை, சேஷ வாகனம் ஆகியவற்றில் அம்மன் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 15-ந் தேதி காலை பல்லக்கில் புறப்பாடாகி இரவு மரக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வழிநடை உபயங்கள் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைந்தார்.

நேற்று காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் புறப் பாடாகி வழிநடை உபயங்கள் கண்டருளினார். இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து மூலஸ்தானம் சென்றடைந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் தொடங்குகிறது.

நாளை(புதன்கிழமை) காலை பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்திலும் அம்மன் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நாளை மறுநாள் காலை பல்லக்கிலும் இரவு 8 மணிக்கு முத்து பல்லக்கிலும் அம்மன் புறப்பாடாகிறார். 20-ந் தேதி தெற்ப உற்சவம் நடைபெறுகிறது. அன்று மதியம் 12 மணிக்கு அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைந்து மாலை 5 மணிக்கு அபிக்ஷேகம் கண்டருளி இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் கண்டு வழிநடை கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார்.

தேரோட்டத்தையொட்டி சமயபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் வந்து குவிந்துள்ளனர். மேலும், அம்மனுக்காக விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம், அலகு காவடி, அக்னி சட்டி, முளைப்பாரி எடுத்தும், தங்களது வேண்டுதல் நிறைவேற குழந்தைகளை கரும்பு தொட்டில் கட்டியும் பாதயாத்திரையாக புறப்பட்டு நேற்று சமயபுரம் வந்தடைந்தனர். பின்னர் அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். அவர்கள் அங்குள்ள மண்டபங்கள், கோவில் வளாகத்தில் தங்கினர்.

தேரோட்டத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காக ச.கண்ணனூர் பேரூராட்சி சார்பில், கொள்ளிடம் நெம்பர்-1 டோல்கேட்டிலிருந்து சமயபுரம் நாலுரோடு வரை 60 இடங்களில் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூர் செல்லும் சாலையில் உள்ள சக்தி நகரில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆண்கள் மற்றும் பெண்களுக்்கென தனித்தனியே நகரும் கழிவறைகள் தண்ணீர் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் ஆட்டுச்சந்தையிலிருந்து பேரூராட்சி அலுவலகம் வரை மின்விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

சமயபுரத்தில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துவதற்கு சுழற்சி முறையில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருவிழாவையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சிகளை சேர்ந்த சுமார் 140 பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளதாக செயல் அலுவலர் குமரன் தெரிவித்தார்.