ஆன்மிகம்

மங்கலங்களை அள்ளித் தரும் மகமாயி சமயபுரம் மாரியம்மன்- தல வரலாறு

நோய்களைத் தீர்க்கும் மருத்துவச்சியாகவும், ஆதிபராசக்தியின் வடிவமாகவும் அம்மன் விளங்குகிறாள்.

திருச்சி மாவட்டதில் பிரசித்தி பெற்ற தலங்களில் அம்மனுக்கென்று பேர் போன தலம் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும்.  சமயபுரம் மாரியம்மன் கோவில் இருக்குமிடம் கண்ணனூர் என அழைக்கப்படுகிறது. இவ்விடம் கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

தல வரலாறு:

கிருஷ்ணாவதாரத்தில் தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் அவதரித்தனர். பிறகு அவ்விரு குழந்தைகளும் இறைவன் விருப்பத்தினால் இடம் மாறின. தேவகியின் பிள்ளையால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், பிள்ளைகள் இடம் மாறியதை அறியாமல் சிறையில் தேவகியிடமிருந்த பெண் குழந்தையைக் கொல்ல மேலே தூக்கினான்.

அக்குழந்தை அவன் கைகளிலிருந்து மேலே எழும்பி, வில், அம்பு, சூலம், பாசம், சங்கு, சக்கரம், வாள் முதலிய ஆயுதங்களைத் தரித்துத் தோன்றினாள். அத்தேவியே மகா மாரியம்மன் என்று அழைக்கப்பட்டாள். மக்களின் தீமைகளையும், தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் தெய்வமாக சமயபுரத்தில் மாரியம்மன் அருள்பாலிக்கிறாள்.

சாய்ந்தாள் சமயபுரம், சாதித்தாள் கண்ணபுரம்!

மாரியம்மன் உற்சவர் திருமேனி ஆதியில் விஜயநகர மன்னர்களால் வழிபாடு செய்யப்பெற்று வந்தது. ஒருமுறை இந்தச் சிலையை தந்தப்பல்லக்கில் கொண்டுவரும்போது, பல்லக்கைத் தூக்கி வந்தவர்கள் அம்மன் திருமேனியை வரும் சமயபுரத்தில் கீழே இறக்கி வைத்து உணவு உட்கொள்ள சென்றார்கள்.

பின்னர் வந்து தூக்க முயலும் போது பல்லக்கை தூக்க இயலவில்லை எனவும் பிறகு விஜயரங்க சொக்கநாதர் கண்ணனூரில் தனித் திருக்கோயில் அமைத்து அம்மனை இங்கு பிரதிஷ்டை செய்தார் எனவும் கூறுவர். இதைக் குறித்தே சாய்ந்தாள் சமயபுரம், சாதித்தாள் கண்ணபுரம் என்ற முதுமொழியும் வழக்கில் உள்ளது.

கண்ணனூர்- வரலாற்று குறிப்புகள்:

முன்னொருகாலத்தில் ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகக் கருதப்படுகிறது. பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அவை அழிந்து வேம்புக்காடாக மாறியதாக கூறுவார்.

பின் கர்நாடகத்தை சேர்ந்த துவார சமுத்திரத்திலிருந்து அரசாண்டு வந்த போசாளர் என்ற மரபினர் 13-ஆம் நூற்றாண்டில் கண்ணனூரைத் தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர். இவர்கள் வலிமை குன்றிய பிற்கால சோழ மன்னர்களுக்கு நேசக்கரம் நீட்டி உதவி செய்தனர்.

சோழ ராஜ்ய பரிதிஷ்டாபனாசாரியன் - சோழகுல ஏக ரக்ஷன் என அழைத்துக்கொண்டனர். போசாள மன்னன், வீரசோமேசுவரன் இந்நகரை அமைத்து இதற்கு விக்கிரமபுரம் என்று அழைத்ததை பெங்களூர் அருங்காட்சியகச் செப்பேடுகள் கூறுகின்றன.

தற்பொழுது கண்ணனூரில் உள்ள போஜேசுவரம் என்று அழைக்கப்படும் சிவன்திருக்கோயில் வீர சோமேசுவரனால் கட்டப்பட்டதாகும். போசாளீசுவரம் என இக்கோவில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.

வீர சோமேஸ்வரனுக்குப் பின்னர் அவன் மகன் வீர ராமநாதன் கண்ணனூரிலிருந்து அரசாட்சி செய்தான். வீர ராமநாதனின் அரசாட்சி கண்ணனூர் வரலாற்றில் பொற்காலமாகத் திகழ்ந்தது. பின்னர் பாண்டியர்கள் கண்ணனூரை கைப்பற்றினர்.

கண்ணனூரில் முகமதியர் காலத்தில் ஒரு போர் நடந்திருக்கிறது. போசாள மன்னர்களில் கடைசி மன்னரான வீரவல்லாளன் மதுரையை ஆண்ட கியாசுதீன் துக்ளக்குடன் நடந்த போரில் வஞ்சிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். பின் கண்ணனூர் முகமதியர் வசம் வந்தது.

பிறகு விஜய நகர பேரரசின் பிரதானியான கம்பண்ண உடையார் காலத்தில் அவ்வரசின் ஆளுகைக்குட்பட்டு இருந்தது. அப்போது 18-ம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப்போரில் கண்ணனூர் முக்கிய இடம் வகித்தது.

ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் நிகழ்ந்த போரில் இராபர்ட் கிளைவ் பிரெஞ்சுப் படைகளை இவ்விடத்தில் முறியடித்து ஆங்கில அரசின் ஆதிக்கத்தை நிலைநாட்டினார். எனவே கண்ணனூர் தொடர்ந்து வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊராகத் திகழ்ந்திருப்பதை அறியமுடிகிறது.

அன்னை அருளாட்சி செய்யும் மாரியம்மன் கோவிலில் கல்வெட்டுகள் ஏதும் காணப்படவில்லை. எனவே, இக்கோவில் எப்போது கட்டப்பட்டது என்பதற்கு வரலாற்றுச் சான்று இல்லாமல் போய்விட்டது.

எனினும், மண்ணச்சநல்லூர் அருகே கோபுரப்பட்டி என்று வழங்கப்படும் ஊரில் உள்ள பாச்சில் அமலீசுவரம் சிவன் கோவில் கல்வெட்டில் - பனமங்கலம், துறையூர் போன்ற ஊர்கள் குறிப்பிடப்படுகின்றன.எனவே சோழர் காலத்திலேயே இங்கு மாரியம்மன் திருக்கோவில் இருந்திருக்க வேண்டும். பின்னர் போசாள மன்னர் காலத்தில் மேலும் சிறப்பு அடைந்திருக்க வேண்டும்.

சமயபுரம் கோவிலில் கொடி கம்பத்தை அடுத்துள்ள மண்டபத்தின் தூண்களில் கீழ் பகுதியில் நாயக்க மன்னர்களின் உருவங்கள் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. எனவே 700 ஆண்டுகளுக்கு மேல் இக்திருக்கோயில் அமைந்துள்ளதென அறியலாம். சிறந்த பிரார்த்தனைத் தலமாகவும், சக்தி தலமாகவும் இக்கோவில் விளங்கி வருகின்றது.

சிறப்புகள்:

சமயபுரம் அம்மன் சிலை சாதாரணக் கற்களால் ஆனது அல்ல. இது பல்வேறு மூலிகைகள், நவதானியங்கள் மற்றும் களிமண்ணால் செய்யப்பட்டது. எனவே, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை, மாறாக முன்புறம் உள்ள சிறிய உற்சவ சிலைக்கு மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

நோய்களைத் தீர்க்கும் மருத்துவச்சியாகவும், ஆதிபராசக்தியின் வடிவமாகவும் அம்மன் விளங்குகிறாள். கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு இங்கு சென்று வழிபடுவது சிறப்பு.

பயணம்:

திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சமயபுரத்திற்குத் தொடர் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நடை திறந்திருக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் 12 மணி வரை

மாலை 4 மணி முதல் 9 மணி வரை