ஆன்மிகம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் படிபூஜை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அதிக பொருட்செலவிலும், ஆடம்பரமாகவும் நடைபெறும் படிபூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 10-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 11-ந் தேதி அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகிறது.

15-ந் தேதி விஷூ பண்டிகையினை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று படி பூஜை நடைபெற்றது. அதிக பொருட்செலவிலும், ஆடம்பரமாகவும் நடைபெறும் இந்த பூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

18-ம் படிக்கு கீழ், மாலை 6 மணிக்கு நடைபெற்ற தீபாராதனைக்கு பின் தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் கலச பூஜை நடந்தது. தொடர்ந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பதினெட்டு படிகளிலும், சிறப்பு பூஜை நடைபெற்றது. சித்திரை மாத பூஜைக்கு பின் கோவில் நடை நாளை(வெள்ளிக்கிழமை ) இரவு 10.30 மணிக்கு அடைக்கப்படும்.

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற மே மாதம் 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.