மண்டல பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15-ந்தேதி திறக்கப்பட்டு நாள்தோறும் பூஜைகள் நடைபெற்று வந்தன. ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
மண்டல பூஜை கடந்த 26-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. அன்றைய தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சரண கோஷம் முழங்க தரிசனம் செய்தனர். அன்று இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
மகர விளக்கு பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (சனிக்கிழமை) திறக்கப்படுகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். மற்ற விஷேச பூஜைகள் நடைபெறாது என்பதால், இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்ட பின்பு கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல், அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும்.
பிரசித்திப்பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந்தேதி நடைபெறுகிறது. மகர விளக்கு தினத்தில் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் வலிய கோயிக்கல் கோவிலில் இருந்து ஊர்வலமாக வருகிற 12-ந்தேதி எடுத்து வரப்படுகிறது. முன்னதாக 11-ந்தேதி அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர் குழுவினரின் எருமேலி பேட்டை துள்ளல் நடைபெறும்.
வருகிற 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும். 20-ந்தேதி பந்தளம் கொட்டாரம் ராஜ பிரதிநிதியின் தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.
மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.