சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை சிறப்பு வாய்ந்தவை. இதுதவிர தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் விழாவின் போதும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள்- வழிபாடுகள் நடைபெறும். எனவே இந்த நாட்களிலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 16-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.
17-ந் தேதி முதல் அதிகாலை 5 மணி அளவில் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். மக்கள் அனைத்து வளங்களும் பெற்று நலமுடன் வாழ வேண்டி லட்சார்ச்சனையும் 17-ந் தேதி தொடங்குகிறது.
21-ந் தேதி வரை தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் நடைபெற உள்ளது. 21-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந் தேதி மாலையில் மீண்டும் நடை திறக்கப்பட்டு, 6-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.