நெல்லிக்குப்பம் அருகே உள்ள பில்லாலி தொட்டி ரேணுகாபரமேஸ்வரி முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செடல் திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு காலை, மாலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனையும், இரவு வீதி உலாவும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் செடல் திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி அம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தங்களது உடம்பில் செடல் குத்தியபடி வேன், மினிலாரி, கார், ஆட்டோ போன்ற வாகனங்களை முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு இழுத்து வந்தனர். மேலும் பக்தர்கள் பறக்கும் காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பின்னர் மாரியம்மன் கோவில் அருகே இருந்த நாடக மேடையில் பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் எண்ணெயில் பக்தர்கள் கையை விட்டு வடையை சுட்டனர். அப்போது அங்கே கூடி நின்ற பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.