மகா சண்டியாக பூஜை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் நடந்த போது எடுத்த படம். 
ஆன்மிகம்

ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் மகா சண்டியாக பூஜை தொடங்கியது

ரத்தினகிரி பாலமுருகன் கோவில் மலையடிவாரத்தில் மகா சண்டியாக பூஜை தொடங்கியது. தொடர்ந்து பூஜை நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது.

மாலை மலர்

வேலூர் அருகே உள்ள ரத்தினகிரி பாலமுருகன் கோவில் மலையடிவாரத்தில் உலக நன்மை வேண்டி முருகபெருமானுக்கு 3 நாட்கள் நடைபெறும் மகா சண்டி யாக பூஜை நேற்று தொடங்கியது.

முதல் நாளான நேற்று 1,008 கலச பூஜையுடன், மலையடிவாரத்தில் உள்ள விஜயதுர்க்கை அம்மனுக்கு மகா சண்டியாக பூஜை பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கலவை சச்சிதானந்த சுவாமிகள், பாலமதி ராமகிருஷ்ணசாது, எம்.எல்.ஏ.க்கள் காந்தி, ஈஸ்வரப்பன், சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன், நீதிபதி கல்யாணசுந்தரம், ஆற்காடு கண்ணன் ஸ்வீட்ஸ் கே.பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக யாகபூஜைக்கு வேண்டிய பொருட்களை பெண்கள் ஊர்வலமாக யாக குண்டத்திற்கு எடுத்து வந்தனர். யாகத்தை சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில் பல்வேறு கோவில்களில் இருந்து 76 சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர்.

இன்று (சனிக்கிழமை) காலை 8-30 மணி முதல் பகல் 1 மணி வரை 2-ம் கால ஸ்கந்த யாக பூஜை, 2-ம் கால சண்டி யாக பூஜை, மகாதீபாராதனை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை 3-ம் கால ஸ்கந்த யாக பூஜை, 3-ம் கால சண்டியாக பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் 10 மணி வரை 4-ம் கால ஸ்கந்த யாக பூஜை, காலை 10 மணிக்கு துர்க்கை அம்மனுக்கு மகாசண்டியாக கலச அபிஷேகம், மகா தீபாராதனை, பகல் 1-30 மணிக்கு முருகப்பெருமானுக்கு கலச அபிஷேகம், விசேஷ அலங்காரம், மகாதீபாராதனை நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மு.சிவஞானம் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.