ஆதி பைரவர் அவதார தலம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது திருத்தளி நாதர் ஆலயம். பைரவ மூர்த்தங்களில் முதன்மையானவராக கருதப்படும் ஆதி பைரவர் தோன்றிய தலம் இது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஆலயத்தில் உள்ள இறைவன், ராமாயணத்தை எழுதிய வான்மீகி முனிவருக்கு அருள் வழங்கியதாக தல புராணம் சொல்கிறது. இந்த ஆலயமானது திருநாவுக்கரசர் மற்றும் அருணகிரிநாதர் ஆகியோரால் பாடப்பெற்ற தலமாகும். சிவபெருமானின் தாண்டவங்களில் ஒன்றான, கவுரி தாண்டவத்தைக் காண்பதற்காக மகாலட்சுமி தேவி தவம் செய்த இடமும் இதுவே ஆகும்.
சிவலிங்கத்தில் வாள் வடு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஊர் அய்யர் மலை. இங்கு ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இத்தல இறைவனை ரத்தினகிரீஸ்வரர் என்றும், வாட்போக்கி நாதர் என்றும் அழைக்கிறார்கள். கருவறையில் வீற்றிருக்கும் சிவலிங்கத்தின் தலைப்பகுதியில் மிகப்பெரிய வடு காணப்படுகிறது. இது மன்னன் ஒருவன், வாளால் வெட்டியதால் ஏற்பட்ட வடு என்று கூறுகிறார்கள். இதனாலேயே இத்தல இறைவனுக்கு வாட்போக்கி நாதர் என்ற பெயர் வந்ததாம்.
வாத நோய் நீக்கும் ஆலயம்
மதுரைக்கு அருகே உள்ள ஊர் திருவாதவூர். இந்தத் தலம் சிவபெருமானைப் பாடிய நால்வர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் அவதரித்த சிறப்பு மிக்க தலமாகும். இங்குள்ள திருமறைநாதர் ஆலயம் வாதம் போன்ற நோய்களைத் தீர்க்கும் புனிதத் தன்மை கொண்ட ஆலயமாக விளங்குவதாக கூறுகிறார்கள். சனி பகவானின் சாபம் நீங்கிய தலமாகவும் இது விளங்குகிறது. சுயம்பு லிங்கமாக காட்சி தரும் இத்தல இறைவனின் தலைப்பகுதியில், பசுவின் பாதச்சுவடு காணப்படுகிறது.
பிருங்கி முனிவர் தவமியற்றிய மலை
சென்னை அருகே உள்ளது பரங்கிமலை என்ற பகுதி. பிருங்கி என்ற முனிவர், சிவபெருமானின் மீது அதீத பக்தி கொண்டவர். அவரைத் தவிர, அவர் அருகில் வீற்றிருக்கும் அன்னை பார்வதிதேவியைக் கூட வணங்க மறுப்பவர். ‘தனியாக அமர்ந்திருப்பதால் தானே ஈசனை மட்டும் சுற்றி வந்து பிருங்கி முனிவர் வணங்கிச் செல்கிறார்’ என்று நினைத்த பார்வதி தேவி, ஈசனின் அருகில் ஒட்டியபடி அமர்ந்திருந்தார். அப்போது பிருங்கி முனிவர், வண்டு உருவம் கொண்டு இறைவனை மட்டும் சுற்றி வந்து வழிபட்டுச் சென்றார். இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி, பிருங்கி முனிவருக்கு சாபம் கொடுத்தார். அந்த சாபம் நீங்க பிருங்கி முனிவர் பூலோகம் வந்து தவம் செய்த இடம் ‘பிருங்கி மலை’ என்று அழைக்கப்பட்டது. அதுவே நாளடைவில் மருவி ‘பரங்கிமலை’ என்று ஆனதாக கூறப் படுகிறது.
பிரச்சினை தீர்க்கும் பைரவர்
ஒவ்வொரு சிவன் கோவில்களிலும் விநாயகர் சன்னிதி, முருகன் சன்னிதி, அம்பாள் சன்னிதி போல, மற்றொரு முக்கியமான சன்னிதியாக திகழ்வது பைரவர் சன்னிதி. பைரவருக்கு உகந்த நாள் தேய்பிறை அஷ்டமி. அன்றையதினம் வடை மாலை சாற்றி, பைரவரை வணங்கினால் வழக்குகள், வீண் பிரச்சினைகள், அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.