ஸ்ரீராமகிருஷ்ணர் கொல்கத்தாவில் மிக நோய் வாய்ப்பட்டிருந்த சமயத்தில், அவரை டாக்காவில் பிரத்தியட்சமாக, தான் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது கண்டதாக விஜய கிருஷ்ண கோஸ்வாமி அறிவித்தார். ஒரே சமயத்தில் ஸ்ரீராமகிருஷ்ணர் இரு இடங்களில் இருந்தது முதல் அதிசயம் ஆகும்.
மற்றொன்று தூய அன்னையாரின் வியப்புக்குரிய ஒரு அனுபவம் ஆகும். காசிப்பூரில் ஸ்ரீராமகிருஷ்ணரின் உடல்நிலை மிக மோசமாக இருந்த போது ஒருநாள் ஸ்ரீராமகிருஷ்ணர் வேகமாக தன் அறையை விட்டுச் செல்வதனை அன்னையார் கண்டார்.
அந்த சமயத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரால் படுக்கையை விட்டு எழுந்திருக்கக்கூட இயலாது. அப்படி இருக்கும்போது இது எவ்வாறு சாத்தியமாகும் என்று எண்ணிய அன்னையார் தான் கண்ட காட்சி கற்பனையோ என்று ஐயமுற்று ஸ்ரீராமகிருஷ்ணரின் அறைக்குச் சென்று பார்த்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர் அறையில் இல்லை. அன்னையார் சிறிது நேரத்திற்குப் பிறகு மறுபடியும் அறைக்குச் சென்று பார்த்தார். அப்போது ஸ்ரீராமகிருஷ்ணர் தன் படுக்கையில் இருப்பதைக் கண்டார். அவர் சிறிது நேரத்திற்கு முன்பு எங்கு சென்றிருந்தார் என்று அன்னையார் வினவினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர் கொதிப்பு அடைந்துள்ள மூளையின் கற்பனை என்று கூறி முதலில் நேராகப் பதில் அளிக்கவில்லை. ஆனால் அன்னையார் விடாது வற்புறுத்திக் கேட்டபின் நிரஞ்ஜன் பேரீச்சம்பழம் பறிக்கச் சென்றதையும், அந்த மரத்தில் ஒரு பாம்பு மறைந்திருந்ததையும், அதனை விரட்டி நிரஞ்சனைக் காப்பாற்றுவதன் பொருட்டு தாம் சென்றதனையும் கூறினார்.
ஸ்ரீராமகிருஷ்ணரைப் போன்று நோய் வாய்ப்பட்டிருந்த போது, வேறொருவரால் இதனை செய்ய இயலாது. இந்த நிகழ்ச்சிகளின் காரணமாக பெரும்பான்மையான பக்தர்கள் ஸ்ரீராமகிருஷ்ணர். பலவீனமான இந்த உடலுக்கு மேம்பட்டவர் என்று கருதினர்.
ஸ்ரீராமகிருஷ்ணர் நோய்வாய்ப்பட்டு சியாம்புகூரிலும், காசிப்பூரிலும் இருந்தபோது இரு முக்கிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. சியாம்புகூரிலிருந்த போது காளி பூஜை தினத்தன்று தன்னுடைய அறையில் பூஜை செய்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை கவனிக்கும்படி அவர் கூறினார்.
அதுபோல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. பூஜை நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால் இவரோயார் பூஜை செய்ய வேண்டும். எப்போது பூஜையை ஆரம்பிக்க வேண்டும் என்று எதுவும் கூறவில்லை. மாறாக மவுனமாக அமர்ந்திருந்தார். பக்தர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்களும் மவுனமாக அமர்ந்திருந்தனர்.
ஸ்ரீராமகிருஷ்ணரிடம் திட நம்பிக்கையுடைய கிரீஷிற்கு ஓர் எண்ணம் பளிச்சிட்டது. ஸ்ரீராமகிருஷ்ணரைக் காளியாக பாவித்து பக்தர்கள் வழிபட வேண்டும் என்பது ஸ்ரீராமகிருஷ்ணரின் எண்ணமாக இருக்கலாம் என்று கிரீஷ் ஊகித்தார். சந்தனத்தையும், மலர்களையும் எடுத்து ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவடிகளில் சமர்ப்பித்தார்.
உடனே ஸ்ரீராமகிருஷ்ணரின் உடலில் ஒரு சிலிர்ப்பு உண்டாயிற்று. சமாதி கைகூடியது. அந்நிலையில் ஸ்ரீராமகிருஷ்ணருடைய கைகள் அபய முத்திரையைக் காட்டின. பின்பு பக்தர்கள் அனைவரும் இவரைப் பூஜித்தனர். அப்போது இவருடைய தோற்றத்தில் வியப்புக்குரிய மாற்றம் ஏற்பட்டது.
இவருடைய முகம் பொலிவுடன் விளங்கியது. இவருடைய உதடுகளில் தெய்வீகப் புன்னகை ததும்பியது. அகிலாண்டநாயகியான அன்னை இவர் மூலம் வெளிப்பட்டதை, அனைவரும் இவருடைய தெய்வீகத் தோற்றத்தின் வாயிலாக உணர்ந்தனர்.