சேலம் டவுன் ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தினமும் அபிஷேக, தீபாராதனை செய்யப்பட்டு வருகிறது. முதல் நாளான கடந்த மாதம் 23-ந் தேதி புதிய தங்ககவசம் ராஜகணபதிக்கு சாத்துப்படி செய்யப்பட்டு சிறப்பு பூஜையுடன் லட்சார்ச்சனை தொடங்கியது. தொடர்ந்து மூலமந்திர ஹோமம் நடத்தப்பட்டது. 25-ந் தேதி முதல் மூலவர் சாமிக்கு தினமும் மாலை 4 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வந்தது.
அதாவது, மூலவர் சாமிக்கு தங்க கவச அலங்காரம், வல்லப கணபதி அலங்காரம், குமாரகணபதி அலங்காரம், அவ்வைக்கு அருளிய ராஜகணபதி அலங்காரம் உள்பட நாள்தோறும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை ராஜகணபதி வெள்ளிக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். இரவு சிறப்பு மலர் அலங்காரத்துடன் சத்தாபரணம் நடந்தது.
ராஜகணபதி கோவிலில் சதுர்த்தி விழா இன்று(செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. அதையொட்டி இன்று காலை சாமி வீதிஉலா நடக்கிறது. அதனை தொடர்ந்து உற்சவருக்கு ஆஸ்தான பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து 1,008 லிட்டர் பாலாபிஷேகம் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு பாலாபிஷேகம் அர்ச்சகர்களால் நடத்தி முடிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.