ஆன்மிகம்

புண்ணியம் சேர்க்கும் புரட்டாசி மாத வழிபாடு

புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களில் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது.

புரட்டாசி மாதம்

புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபாடுதான் நம் நினைவுக்கு வரும். சிறப்புமிக்க புரட்டாசி மாதத்தில் பெருமாளை மனதார வழிபட்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை. அதிலும் குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு என்பது மிகவும் விசேஷம்.

மகாவிஷ்ணு

காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்த மாதமாக புரட்டாசி கருதப்படுவதால், இந்த மாதத்தில் பல பெருமாள் கோவில்களில் உற்சவமும், சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன. புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை, 'மகாளய அமாவாசை' என்று சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது மிகவும் சிறப்பானதாகும்.

அக்னி புராணம்

புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களில் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எனவே எம் பயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் விஷ்ணு பகவானை வழிபட வேண்டும்.

புரட்டாசி சனிக்கிழமை

பெருமாளின் அம்சமாக கருதப்படுபவர் புதன். அவருடைய வீடு கன்னி ராசி. புரட்டாசி மாதத்தில் தான் சூரியன் கன்னி ராசியில் அமர்கிறார். எனவேதான், இம்மாதத்தில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. மேலும், புதனுக்கு நட்பு கிரகமாக கருதப்படுபவர், சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை மேலும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

ஜாதகத்தில் ராகு, கேதுவால் ஏற்படும் கால சர்ப்ப தோஷம், நாக தோஷம், மாங்கல்ய தோஷம் போன்ற பல தோஷங்களும் புரட்டாசி மாத கருட வழிபாடால் விலகும். சனி, புதன் திசை நடப்பவர்கள், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் விலகி புண்ணியம் கூடும்.

மேலும், புரட்டாசி மாதத்தில் நடத்தப்படும் சிவபெருமான், விநாயகர், அம்மன் வழிபாடும் சிறப்பான பலனை பெற்றுத்தரும்.

SCROLL FOR NEXT