தஞ்சை புன்னைநல்லூரில் பிரசித்தி பெற்ற சக்தி தலமாக மாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் இருந்து 1,000 பால்குட ஊர்வலம் நேற்று காலை புறப்பட்டது. நாதஸ்வர இசையுடனும், வாண வேடிக்கையுடனும், வேத கோஷங்களுடன் புறப்பட்ட இந்த பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது.
அங்கு 4 ஆயிரம் லிட்டர் பாலினால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் வாணவேடிக்கையுடன் அம்மன் புறப்பாடு நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை பிராமணாள் கைங்கர்ய டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.