சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினந்தோறும் உற்சவர் வெள்ளி கேடகத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், மாலையில் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
சாமி வீதிஉலாவின்போது திருமறை பாராயணம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 21-ந்தேதி கஜமுகா சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்றுமுன்தினம் தேரோட்டம் நடந்தது.
சதுர்த்தி விழாவில் நேற்று சிகர நிகழ்ச்சியாக தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி குளக்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. விநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் குளக்கரைக்கு எதிரே எழுந்தருளினார். அங்கு அங்குச தேவருக்கும் சண்டிகேசுவரருக்கும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பிச்சைக்குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அங்குசதேவர் மூன்று முறை குளத்தில் மூழ்கி எழும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.
அதன்பின் விநாயகர் சதுர்த்தியையொட்டி ராட்சத கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பச்சரிசி, வெல்லம், கடலைப்பருப்பு, பாசிபருப்பு, எள்ளு உள்ளிட்டவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட 18 படி ராட்சத கொழுக்கட்டை கற்பக விநாயகருக்கு படையல் செய்யப்பட்டது. தொடர்ந்து விநாயகருக்கு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகளின் திருவீதி உலா நடைபெற்றது.