பேரூர் படித்துறையில் உள்ள படிகள் உடைந்து தகர்ந்து கிடக்கும் காட்சி. 
ஆன்மிகம்

பாவம் தீர்க்க பக்தர்கள் குவியும் பேரூர் படித்துறைக்கு ‘விமோசனம்’ கிடைப்பது எப்போது?

பாவம் தீர்க்க பக்தர்கள் குவியும் பேரூர் படித்துறைக்கு ‘விமோசனம்‘ கிடைப்பது எப்போது? என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்த கோவிலுக்கு அருகே நொய்யல் ஆறு செல்கிறது. அதில் படித்துறை உள்ளது. காஞ்சிமா நதி என்று அழைக்கப்படும் இந்த நதியில் மூழ்கி குளித்து விட்டு பட்டீசுவரரை தரிசித்தால் பாவம், நோய்கள் தீரும் என்று கூறப்படுகிறது. அதுபோன்று ‘பேரூர் பெரியமகள் வந்தால்தான் காவிரி ஆற்றுக்கு சிறப்பு’ என்று முன்னோர்கள் கூறுவது உண்டு.

நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி, காவிரி ஆற்றில் கலக்கும். அந்த அளவுக்கு நொய்யல் ஆற்றில் தண்ணீர் ஓடிய பெருமை மிகுந்த காலம் உண்டு. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நொய்யல் ஆறு வறண்டு பாலைவனமாக காட்சி அளிக்கிறது.

இந்த படித்துறையில் எத்தனை நாட்கள் தண்ணீர் தேங்கி நின்றாலும் பாசி படியாத வகையில் கற்களால் அமைக்கப்பட்டு உள்ளது. முன்பு படித்துறையில் 18 படிகள் இருந்தன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை பேரூர் படித்துறை நன்றாகத்தான் இருந்தது. ஆனால் தற்போது பல படிகளை காண வில்லை. இருக்கிற படிகளும் உடைந்து, பக்தர்கள் இறங்க முடியாத அளவுக்கு சேதமடைந்த நிலையில் படுமோசமாக காணப்படுகிறது.

அதையும் மீறி ஆற்றுக்குள் இறங்கினால் உடைந்த மதுபாட்டில்கள் பக்தர்களின் கால்களை பதம் பார்த்து விடுகிறது. தற்போது படித்துறை இருக்கும் நிலையை பார்க்கும் போது புகழ்வாய்ந்த பேரூர் படித் துறையா? இப்படி இருக்கிறது என்று நினைக்க தோன்றுகிறது. பாவம் தீர்க்க பக்தர்கள் குவியும் பேரூர் படித்துறைக்கு ‘விமோசனம்‘ கிடைப்பது எப்போது? என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இது குறித்து பக்தர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

கோவையை அடுத்த பேரூர் படித்துறையில் உள்ள நொய்யல் ஆற்றில் இறந்தவர்களின் எலும்பை புதைத்து வைத்தால் 48 நாட்களுக்குள் அந்த எலும்பு கூழாங்கல்லாக மாறிவிடும். அந்த அளவுக்கு நொய்யல் ஆற்றுக்கு சக்தி இருக்கிறது. இதனால் தான் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்ய பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இங்கு வருகிறார்கள். அவர்கள் தர்ப்பணம் செய்த துணிகளையும் ஆற்றுக்குள் வீசுவார்கள்.

குறிப்பாக ஆடிபெருக்கு, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட நாட்களில் இந்த படித்துறைக்கு ஏராளமானோர் வந்து முன்னோருக்கு திதி கொடுக்க வருவார்கள். ஆனால் இங்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து கொடுக்கப்பட வில்லை. ஆற்றுக்குள் வீசப்பட்ட துணிகள் மற்றும் குப்பைகளை சுத்தம் கூட செய்யாததால், ஆற்றுக்குள் இறங்கினாலே அதிகளவில் துர்நாற்றம் வீசுகிறது. அவற்றை சரிசெய்தால் படித்துறையே பளிச்சென்று அழகாக இருக்கும்.

ஒருசிலர் படித்துறையை நன்றாக கழுவி அதில் சாப்பாடு வைத்து சாப்பிடுவார்கள். அந்த அளவுக்கு படித்துறையும் சுத்தமாக முன்பு இருந்தது. தற்போது உடைந்து தகர்ந்து காணப்படுவதால் அதற்குள் விஷப்பூச்சிகள் அதிகரித்து விட்டது. இதனால் படித்துறை அருகே செல்லக்கூட பயமாக இருக்கிறது.

இதற்கு முன்பு நொய்யல் ஆற்றில் தண்ணீர் இல்லை என்றால் ஆற்றுக்குள் இருக்கும் மணலை தோண்டுவார்கள். உடனே ஊற்றுநீர் சுரந்துவிடும். ஆனால் தற்போது படித்துறை அருகே குவிந்துகிடந்த மணலை காணவில்லை. படியும் பாதி தான் இருக்கிறது. ஆக்கிரமிப்பு காரணமாக ஆறும் சுருங்கி விட்டது.

மேலும் படித்துறைக்கு வருபவர்களுக்கும் சில பொறுப்புகள் இருக்கிறது. அவர்கள் படித்துறையை சேதப்படுத்த கூடாது. நொய்யல் ஆற்றில் மது பாட்டில்களை வீசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் புகழ்மிக்க படித்துறையின் பெருமை நிலைத்து நிற்கும். எனவே கோவில் நிர்வாகம் அல்லது மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து தகர்ந்து போன படித்துறையை சரி செய்ய வேண்டும்.