ஆன்மிகம்

பேரூர் பட்டீசுவரர் கோவிலில் ஆனி மாத நாற்றுநடவு திருவிழா

கோவையை அடுத்த பேரூரில் பழமை வாய்ந்த பட்டீசுவரர், பச்சைநாயகி அம்மன் கோவிலில் ஆனி மாத நாற்றுநடவு திருவிழா நடைபெற்றது.

கோவையை அடுத்த பேரூரில் பழமை வாய்ந்த பட்டீசுவரர், பச்சைநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அமைந்துள்ள பகுதியில், உலக மக்களுக்கு பசிப்பிணி போக்கும் உழவரே உயர்குடி மாந்தர் என அனைவரும் உணரும் விதத்தில் பட்டீசுவரர் பட்டி பள்ளராகவும், பச்சைநாயகி அம்மன் பச்சைப்பள்ளியுமாக உருமாறி வயலில் நடவு செய்தனர் என்றும், அவர்களுடன் பிரம்மா, விஷ்ணு, இந்திரன் ஆகியோரும் நடவு செய்தனர் என்றும் கச்சியப்ப முனிவர் பேரூர் புராணத்தில் கூறி உள்ளார்.

அந்த நாளையே ஆனி மாத நாற்றுநடவு திருவிழாவாக பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆனி மாத நாற்றுநடவு திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கணபதி வழிபாடு, அன்னலட்சுமி பூஜை நடைபெற்றது.

பின்னர் என்.பிரபுக்குமார்(சோழர்), கிருஷ்ணபட்டக்காரர்(கொங்கு), மாசிலாமணி(பாண்டியர்), ராதாகிருஷ்ணன்(கடையர்) ஆகிய 4 வம்ச பட்டக்காரர்கள் தலைமையில் நாற்று நடவு திருவிழா தொடங்கியது. முன்னதாக விழாவில் பங்கேற்க வந்த தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்க நிறுவனர் ஜான்பாண்டியனுக்கு தமிழர் எழுச்சி கள நிறுவனர் உ.க.உலகநாதன், அமைப்பாளர் பேரூர் முத்துக்குமார் தலைமையில் பஞ்சாபி மேள, தாளமும், பேரூர் நகர தேவேந்திர குல மக்கள் சார்பில் சிறப்பான முளைப்பாரி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து பட்டீசுவரர், பச்சைநாயகி அம்மன் வயலில் இறங்கி நாற்று நடும் நிகழ்ச்சி நடந்தது. அதில் வயலில் இறங்கி பட்டக்காரர்கள் மற்றும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பக்தியுடன் குலவையிட்டு நாற்று நட்டனர். அதைத்தொடர்ந்து பட்டி பள்ளரும், பச்சை பள்ளியும், சுந்தரருடன் சேர்ந்து கோவிலை சுற்றி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் மள்ளர் மீட்பு கள நிறுவனர் செந்தில், டி.ஏ.பெருமாள், பேரூர் மயில், பிரபாகர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT