ஆன்மிகம்

பெருமாள் கோவிலில் சடாரி ஏன் வைக்கிறார்கள் தெரியுமா?

சடாரியின் மேல் பகுதியில் உற்று நோக்கினால், அதில் மகாவிஷ்ணுவின் இரு திருவடிகள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

பெருமாள் கோவில்களுக்குச் சென்று இறைவனை தரிசித்து முடித்ததும், அர்ச்சகர் நமக்கு துளசியும், தீர்த்தமும் வழங்குவார். அத்துடன் நம் தலையில் கிரீடம் போன்ற ஒரு பொருளை வைத்து ஆசீர்வதிப்பார். அதற்கு 'சடாரி' அல்லது 'சடகோபம்' என்று பெயர்.

எதற்காக இந்த சடாரி சேவை என்று எப்போதாவது யோசித்தது உண்டா? வைணவ ஆலயத்தில் வழங்கப்படும் இந்த சடாரியின் பின்னணியில் உள்ள ஆழ்ந்த ஆன்மிகத் தத்துவம் பலருக்கும் தெரிவதில்லை. 'சடம் ஹரி (ஹரியின் பாதம்) என்பதே மருவி 'ஸ்ரீ சடாரி' என்று அழைக்கப்படுகிறது.

சடாரியின் மேல் பகுதியில் உற்று நோக்கினால், அதில் மகாவிஷ்ணுவின் இரு திருவடிகள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். கருவறையில் இருக்கும் பெருமாளின் திருவடியை நாம் நேரடியாகத் தொட முடியாது. ஆனால், சடாரி மூலம் அந்த இறைவனின் அருளை நாம் நேரடியாக அனுபவிக்கலாம்.

சடாரியை நம் தலையில் வைப்பது, பகவானின் திருவடிகளை நேரடியாகத் தலையில் ஏற்றிக் கொள்வது போல, 'இறைவா, நான் உன் அடியேன், உன் திருவடிகளே எனக்கு தஞ்சம் என்று நம்மை முழுமையாக இறைவனிடம் சரணாகதி கொடுப்பதற்கான அடையாளமாகக் கருதப்படுகிறது.

மனிதர்களுக்கு இயல்பாக இருக்கும் 'நான்' என்ற அகங்காரமும், 'எனது' என்ற மமதையும் இறைவனின் சன்னிதியில் அழிய வேண்டும் என்பதை நினைவூட்டவே சடாரி சாற்றப்படுகிறது. மேலும், வைணவ மரபில் 'நம்மாழ்வாரே" பெருமாளின் திருவடிகளாகப் போற்றப்படுகிறார். நம்மாழ்வாருக்கு 'சடகோபன்' என்ற திருநாமமும் உண்டு. எனவே, சடாரியைத் தலையில் ஏற்பதன் மூலம், பெருமாளின் அருளோடு சேர்த்து ஆழ்வாரின் அருளையும் நாம் ஒருசேரப் பெறுகிறோம்.