ஆன்மிகம்

பெரியபாளையம் பவானி அம்மனுக்கு பிடித்தமான வேப்பிலை ஆடை

மக்கள் அம்மனுக்குப் பிரியமான வேப்பிலைகளைக் கொண்டு தொடுத்த உடையையே ஆடையாக அணிந்து, வேண்டுதல்களை நிறைவேற்ற இங்கே வருகிறார்கள்.

பெரியபாளையத்தில் மக்கள் அனைவரும் அன்னையின் முன் பக்தி பரவசத்தால் மயங்கி நிற்பதை ஆடிப்பெரு விழாவில் காணலாம். இங்கு மற்ற இடங்களில் காண இயலாத வித்தியாசமான சிறப்பு ஒன்று உண்டு. அது அவர்கள் அனைவரும் அம்மனுக்குப் பிரியமான வேப்பிலைகளைக் கொண்டு தொடுத்த உடையையே ஆடையாக அணிந்து, வேண்டுதல்களை நிறைவேற்ற இங்கே வந்து சேருகிறார்கள்.

அன்னை பவானி பாதி உருடன் வலது மேற்கையில் சக்கரமும். இடப்புறம் சங்கும் ஏந்தி, சங்கு சக்கரதாரியாக அமர்ந்து இருக்கின்றாள். ஒரு கையில் வாளும், இடது கையில் அருள்பாலிக்கும் அமுத கலசமும் கொண்டு தோற்றமளிக்கின்ற கோலம் அன்னை உருவில் அமைந்தது.

வேறு எங்கும் இவ்வகை அன்னையின் கோலத்தை காண்பது அரிதினும் அரிது. சங்கு சக்கரதாரியாக இவள் அலங்கரிக்கப்பட்டுள்ளாள். ஆண்டுதோறும் ஆடிப்பெருவிழா, ஆடி முதல் ஞாயிறு அன்று தொடங்கி பத்து ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பத்தாவது ஞாயிற்றுக்கிழமை அன்று உலகத்தின் சோர்வை போக்கு சுறுசுறுப்பினை அன்னை வழங்குவாள்.

விடியற்காலை அன்னையின் சிரத்திலிருந்து பாதம் காண்பதற்கு எண்ணிலடங்கா கண்கள் வேண்டும். கேசாதி பாதம் வழிபாடு செய்வது தேவர்கள் வழிபாடு செய்யும் முறை. அம்முறையிலேயே பகவான் அன்னை பவானியைப் பத்தாவது வாரத்தில் பூசிப்பதைக் காணலாம்.