ஆன்மிகம்

ஓணம் தொடங்கிய இடம்

இன்று ஓணம் பண்டிகை கேரள மக்களால் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது. ஓணன் பற்றிய சிறப்பு தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

மாலை மலர்

இத்தல தாயாரின் திருநாமம் பெருஞ்செல்வ நாயகி என்பதாகும். வாத்சல்யவல்லி என்ற பெயரும் தாயாருக்கு உண்டு. இந்தக் கோவிலில் சாஸ்தாவிற்கும், மகாலட்சுமிக்கும் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன. இந்த கோவிலின் விமானம் விருத்த விமானம். இங்குள்ள சிவலிங்கத்தை, மகாபலி சக்கரவர்த்தி வழிபட்டதாக தல புராணம் தெரிவிக்கிறது.

முதன் முதலாக திருக்காட்கரை அப்பன் கோவிலில் தொடங்கப்பட்ட ஓணம் திருவிழா தான், காலப்போக்கில் கேரளா மாநிலம் முழுவதும் பரவியதாக கூறுகிறார்கள். கபில முனிவர் இந்த தலத்தில் உள்ள வாமனப் பெருமாளை வழிபட்டதால், இங்குள்ள தீர்த்தம் ‘கபில தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கபில தீர்த்தத்தில் உள்ள நீரைக் கொண்டுதான், வாமனருக்கு மூன்றடி நிலத்தை மகாபலி தானம் அளித்ததாக கூறப்படுகிறது.

திருக்காட்கரை அப்பனுக்கு நேந்திரம் வாழைக்குலை வழிபாடு மிகவும் சிறப்பு பெற்றதாகும். தங்களது கோரிக்கைகள் நிறைவேற பக்தர்கள் ஓணம் பண்டிகையன்று, அதிகாலையிலேயே நேந்திரம் குலைகளைத் தோளில் சுமந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று திருக்காட்கரை அப்பனுக்கு சமர்ப்பிப்பதைக் காணலாம். அந்தக் குலைகள் கோவில் முன் விதானங்களில் கட்டித் தொங்கவிடப்படுகின்றன. கேரள மக்களின் வீட்டிலும் ஓணம் பண்டிகை நாளன்று மரத்தாலான திருக்காட்கரை அப்பன் சிலை வைத்து வழிபாடு நடைபெறுகிறது.

அழகுபடுத்தப்படும் அத்தப்பூ கோலம்

ஓணம் திருவிழாவினை 10 நாட்களும் வண்ணமயமாக மாற்றுவது அத்தப்பூக் கோலம் என்றால் அது மிகையாகாது. ஓணம் பண்டிகையில் அத்தப்பூக் கோலம் முக்கிய இடம் வகிக்கும். மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அத்தப்பூக் கோலம் போடப்படும். ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும். அதனால் ஓணத்தையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண் பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக் கொண்டு வருவார்கள். பூக்கோலத்தில் அதை தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவார்கள். முதல் நாள் ஒரே வகையான பூக்கள், இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் இந்த அத்தப்பூக் கோலம் அழகுபடுத்தப் படும்.

வெண்ணிற ஆடை

பருவ மழைக்காலம் முடிந்து எங்கும் பசுமையும், செழுமையும் நிறைந்து காணப்படும் சிங்கம் மாதத்தை கேரள மக்கள் ‘அறுவடைத் திருநாள்’ என்றும் போற்றி வழிபட்டு சிறப்பிக்கின்றனர். முன் காலத்தில் ஓணம் பண்டிகை தினம் அறுவடைத் திருநாளாகவே கொண்டாடப்பட்டு வந்துள்ளதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.