நெல்லையப்பர் கோவில் 
ஆன்மிகம்

நெல்லையப்பர் கோவில் தெப்பத்திருவிழா வருகிற 8-ந் தேதி நடக்கிறது

நெல்லையப்பர் கோவிலில் வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணி அளவில் அம்மன் சன்னதி அருகில் அமைந்துள்ள பொற்றாமரை குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அப்பர் பெருமான் பவனி வரும் விழா நடக்கிறது.

மாலை மலர்

முன்னொரு காலத்தில் சைவ மதத்தினருக்கும், சமண மதத்தினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமண மதத்தினர், சைவசமயக் குரவர்களில் ஒருவரான அப்பர் பெருமானின் ஆழ்ந்த பக்தியினை பரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.

அவரை கல்லில் கட்டி கடலில் போட்டார்கள். அப்போது அப்பர் பெருமான் “கற்றுணை பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே“ என்று சிவபெருமானை நினைத்து பாடினார்.

அப்போது கல்லானது தெப்பமாக மாறி கடலில் மிதந்தது. தெப்ப உற்சவம் மூலம் அப்பர் பெருமான் தனது பக்தியால் சிவன் அருளின் சிறப்பை உலகிற்கு உணர்த்தி, இறைவனின் திருக்காட்சி பெற்றார் என்ற தத்துவம் விளக்கப்படுகிறது. அப்பர் பெருமான் வாழ்வில் நடந்த தெப்ப வரலாற்றுக்கிணங்க பாடல் பெற்ற சைவ சமய தலமாக நெல்லையப்பர் கோவில் விளங்குகிறது.

இந்த கோவிலில் வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணி அளவில் அம்மன் சன்னதி அருகில் அமைந்துள்ள பொற்றாமரை குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அப்பர் பெருமான் பவனி வரும் விழா நடக்கிறது.

அதைத்தொடர்ந்து வரலாற்று தத்துவத்தில் உள்ள தெப்ப மண்டபத்தில் சுவாமி கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்ககிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பர் பெருமானுக்கு திருக்காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ராமராஜா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.