ஆன்மிகம்

இன்று திருக்கார்த்திகை விழா: நெல்லையப்பர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

நெல்லையப்பர் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை விழாயொட்டி நேற்று பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை மலர்

நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருக்கார்த்திகை விழா இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று நெல்லையப்பர் கோவிலில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி சன்னதியில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த கம்பத்தில் வேத மந்திரங்கள் முழங்க தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் தீபத்துக்கு பல்வேறு வகையான தீபாராதனை நடைபெற்றது. மேலும் சிறப்பு ஹோம பூஜையும் நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு திருக்கார்த்திகை ருத்திர தீபம் எனப்படும் சொக்கப்பனை தீபம் கொளுத்தப்படுகிறது. இதையொட்டி இன்று சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக வழிபாடு நடைபெறுகிறது. பின்னர் பரணி தீபம் சொக்கப்பனை முக்கு பகுதிக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு அமைக்கப்படும் சொக்கப்பனையில் தீபம் ஏற்றி கொளுத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து அம்மன் சன்னதி முகப்பில் பாரதியார் தெரு மத்தியில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள், பக்தர்கள் செய்து உள்ளனர்.