சென்னை மாநகரின் இதயப்பகுதியான மயிலாப்பூரில், தெய்வீக மணம் கமழும் வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ளது, சீரடி சாய்பாபா திருக்கோவில். ஆன்மிக ஞானியும், 'அனைவருக்கும் ஒரே இறைவனே' (சப்கா மாலிக் ஏக் ஹே) என்று போதித்த உன்னத துறவியுமான சீரடி சாய்பாபாவிற்கு, தென்னிந்தியாவிலேயே கட்டப்பட்ட மிகப் பழமையான, முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம் இதுவாகும்.
'அகில இந்திய சாய்பாபா சமாஜ்' என்ற அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்படும் இந்த ஆலயம், மகாராஷ்டிராவில் உள்ள சீரடிக்கு நேரில் செல்ல முடியாத பக்தர்களின் குறையைத் தீர்க்கும் அற்புத மையமாகத் திகழ்கிறது. இதனால், சாய்பாபா பக்தர்களால் 'தெற்கின் சீரடி' என்று இக்கோவில் போற்றப்படுகிறது. சீரடியில் பாபாவின் பாதம்பட்ட புனித மண்ணும், அவரது திருக்கரங்களால் எரியூட்டப்பட்ட துனியின் (புனித சாம்பல்) அனலும் இந்த ஆலயத்தில் இன்றும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருவதால், இங்கு கால் வைத்த அடுத்தகணமே மன அமைதியும், சாய்பாபாவின் நேரடிப் பார்வையும் கிடைக்கும் என்கிறார்கள்.
சீரடி சாய்பாபாவின் பிறப்போ அல்லது பூர்வீகமோ அறியப்படாத ஒரு தெய்வீக ரகசியமாகும். பிற்காலத்தில் சூபி தத்துவங்களைப் பரப்பிய அவர், எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி மக்களின் துயரங்களைத் துடைத்தார். மதம், சாதி, இனம், சமூகம் என எவ்விதப் பாகுபாடும் இன்றி, மனிதர்களிடையே அமைதியையும், நல்லிணக்கத்தையும் மட்டுமே போதித்தார்.
சாய்பாபாவின் இந்த உன்னதப் போதனைகளை தென்னகத்தில் வேரூன்றச் செய்தவர், சேலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வழக்கறிஞரும், பாபாவின் தீவிர பக்தருமான ஸ்ரீ நரசிம்ம சுவாமி. சாய்பாபா மீது கொண்ட அளப்பரிய பற்றின் காரணமாக, நாடு முழுவதும் ஆன்மிகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பாபாவின் வாழ்க்கை மற்றும் போதனைகளை எடுத்து ரைத்தார்.
சாய்பாபாவின் மகிமைகளைப் பரப்புவதற்காக, 1941-ம் ஆண்டில் 'அகில இந்திய சாய்பாபா சமாஜத்தை' நிறுவினார். இந்த அமைப்பின் மூலம் 'சாய் சுதா' என்ற ஆன்மிகப் பத்திரிகை தொடங்கப்பட்டு, பாபாவின் வாழ்க்கை மற்றும் அற்புதங்கள் குறித்த பல கட்டுரைகள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்டன.
தொடக்கத்தில், மயிலாப்பூரில் இருந்த ஒரு புளிய மரத்தின் அடியில் சாய்பாபாவின் திருவுருவப் படத்தை வைத்தே நரசிம்ம சுவாமிகள் வழிபட்டு வந்தார். சாய் பாபாவின் அருளால், அந்தப் புளிய மரத்தடியே பிற்காலத்தில் பிரமாண்ட ஆலயமாக உருவெடுத்தது. சுவாமிகளின் ஆன்மிக முயற்சிக்கு அவரது நண்பர் ஜே.டி. பன்னலால் நிதியுதவி செய்ய முன்வந்தார்.
அதன்படி, 1952-ம் ஆண்டில், தான் வழிபட்ட அதே புளிய மரத்தடியில் சாய்பாபாவிற்கு ஒரு அழகான கோவிலை நரசிம்ம சுவாமிகள் நிறுவினார். அதுவே 'அகில இந்திய சாய்பாபா சமாஜத்தின்' உலகளாவிய தலைமை யகமாகவும் மாறியது. இத்தகைய மகத்தான காரியத்தைச் செய்த ஸ்ரீ நரசிம்ம சுவாமிகளின் ஜீவ சமாதியும் இந்த ஆலய வளாகத்திற்குள்ளேயே அமைந்திருப்பது கூடுதல் விசேஷமாகும்.
ஆரம்ப காலத்தில், பாபாவின் திருவுருவப் படம் மட்டுமே இங்கு பிரதானமாக வைத்து வழிபடப்பட்டு வந்தது. அதன்பிறகு, 1987-ம் ஆண்டில் ஸ்ரீ முத்து வெங்கட்ராமன் என்பவரால், பாபாவின் தெய்வீகப் புன்னகை ததும்பும் எழில்மிகு வெள்ளை பளிங்குச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்தப் பளிங்குச் சிலையே இன்றுவரை லட்சக்கணக்கான பக்தர்களின் கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படுகிறது.
இக்கோவிலின் கருவறை மற்றும் சன்னிதியின் உட்பகுதி முழுவதும் கண்கவரும் வெண்மையான பளிங்குக் கற்களால் வடிவமைக்கப்பட்டு, பார்ப்போரை பக்திப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. சாய்பாபாவிற்கு பின்புறம், அழகிய வேலைப்பாடுகளுடன் வெள்ளியால் ஆன 'திருவாசி' (வெள்ளிப் பிரபை) அமைக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளித் திருவாசியின் நடுவே கம்பீரமாக வீற்றிருக்கும் சாய்பாபா, பக்தர்களின் மனக் கவலைகளை போக்குகிறார். ஆரம்ப காலத்தில் நரசிம்ம சுவாமி, எந்த இடத்தில் பாபாவின் திருவுருவப் படத்தை வைத்து தனது வழிபாட்டைத் தொடங்கினாரோ, அதே இடமே இன்று ஆலயத்தின் பிரதான மூலஸ்தானமாக திகழ்கிறது.
'மதங்கள் வேறானாலும் மனித குலம் ஒன்றுதான்' என்ற பாபாவின் உயரிய தத்துவத்திற்கு இலக்கணமாக திகழ்கிறது, மயிலாப்பூர் ஆலயம். இங்கு சாதி, மத பேதமின்றி அனைத்து மதத்தினரும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி பாபாவைத் தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சகோதரர்களுக்காக தனிப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு, குர்ஆன் மற்றும் பைபிள் வசனங்கள் இங்கு ஓதப்படுகின்றன என்பது உலகிற்கே வழிகாட்டும் மத நல்லிணக்க நிகழ்வாகும்.
மகாராஷ்டிர மாநிலம் சீரடியில், பாபா தன் திருக்கரங்களால் ஏற்றி வைத்த 'துனி' எனப்படும் புனித ஜோதி இன்றும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. அந்த அக்னியின் ஒரு பகுதியாக, கொண்டு வரப்பட்ட புனிதச் சுடரே இந்த மயிலாப்பூர் ஆலயத்திலும் இன்றும் அணையாமல் பாதுகாக்கப்படுகிறது. சீரடிக்கு நேரில் செல்ல முடியாதவர்கள், இந்தத் தீபத்தைத் தரிசித்தாலே பாபாவின் நேரடி ஆசியைப் பெறலாம் என்பது நம்பிக்கை.
பொதுவாக கோவில்களில் மூலவரை தொட்டு வழி பட அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், இக்கோவிலில் பக்தர்கள் பாபாவின் திருவுருவச் சிலையைத் தொட்டு, வழிபட அனுமதிக்கப்படுவது சிறப்பாகும். மேலும் பக்தர்கள், தங்களின் கரங்களாலேயே பாபாவிற்கு புத்தாடைகள் மற்றும் மலர் மாலைகளை சமர்ப்பித்து மகிழலாம். பாபாவிற்கு உகந்த நாளான ஒவ்வொரு வியாழக்கிழமையும் இக்கோவிலில் அன்னதானம் நடைபெறுகிறது. இது தவிர, மற்ற நாட்களிலும் ஆலயத்திற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் பாபாவின் ஆசி பெற்ற பிரசாதங்கள் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன.
பரபரப்பான சென்னை மாநகரத்தின் நடுவே அமைந்திருந்தாலும், இக்கோவில் வளாகத்திற்குள் நுழைந்தவுடனேயே இனம் புரியாத அமைதியும், தெய்வீக ஆற்றலும் நம்மைச் சூழ்ந்துகொள்கிறது. மன அழுத்தங்களால் சோர்வாக வரும் மக்களுக்கு, இந்த ஆலயத்தின் ஆன்மிகச் சூழல் புதிய புத்துணர்ச்சியையும், நம்பிக்கையையும் வாரி வழங்குகிறது.
இத்தலத்தில் பிரமாண்டமாக நடக்கும் திருவிழாக்களில் நவராத்திரி பெருவிழா முதன்மையானதாகும். பத்து நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படும் இந்த விழாவின் உச்சகட்டமாக, விஜயதசமி அன்று பாபாவின் 'மகாசமாதி நாள்' அனுசரிக்கப்படுகிறது. தீப அலங்காரங்களும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெறும் இந்நாட்களில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாபாவின் தரிசனம் காண ஆலயத்தில் திரள்வார்கள்.
தன் வாழ்நாளெல்லாம் குரு பக்தியை வலியுறுத்திய பாபாவிற்கு, 'குரு பூர்ணிமா' (வியாச பூர்ணிமா) திரு நாளில் இங்கு நடக்கும் குரு வழிபாட்டு உற்சவங்கள் சிறப்பு வாய்ந்தவை. அதேபோல், ராம நவமி முக்கியத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஏனெனில், பாபாவே தனது பக்தர்களிடம் ராம நவமி திருநாளை தனது பிறந்த நாளாகக் கருதி வழிபடுமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலயத்தை கட்டிய நரசிம்ம சுவாமிகளின் அவதார தினமும் சிறப்புற கொண்டாடப்படுகிறது.
பாபாவிற்கு உகந்த நாளான ஒவ்வொரு வியாழக்கிழமையும், இக்கோவிலில் திருவிழாக் கோலமாகக் காட்சியளிக்கிறது. இந்நாளில் பாபாவின் உன்னதப் போதனைகள், ஆன்மிகச் சொற்பொழிவுகளாக நிகழ்த்தப்படுகின்றன. அத்துடன் பாபாவின் பஜனைப் பாடல்களும், ஆராதனைகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு நடைபெறும் 'சிறப்பு அக்னி பூஜை' (துனி பூஜை) மிகவும் புகழ்பெற்றது. சீரடியின் புனிதத் தீபத்தின் அனலில் நடக்கும் இந்த அக்னி வழிபாட்டை கண்டு தரிசிப்பதற்காகவே ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பம் சகிதமாக திரண்டு வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூரின் மையப்பகுதியில், திருமயிலை ரெயில் நிலையத்திற்கு அருகிலேயே இக்கோவில் அமைந்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது.