ஆன்மிகம்

முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி சாமி தரிசனம்

திருப்பரங்குன்றம் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி சாமிதரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் 44-வது ஆண்டு பூக்குழி உற்சவ விழா தொடங்கியது. திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி கடந்த 10 நாட்களாக கடும் விரதம் இருந்து வந்தனர். திருவிழாவின் முத்தாய்ப்பாக அக்னி கொப்பரைவலம் வருதலும், தேரோட்டமும் நடந்தது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை முத்து மாரியம்மனுக்கு ஏராளமான பெண் பக்தர்கள் பயபக்தியுடன் குலவையிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகமும் மகா தீப ஆராதனையும் நடைபெற்றது.

விழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவில் சிகர நிகழ்ச்சியாக நேற்று மாலை பூக்குழி உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி கோவில்வாசல் எதிரே பூக்குழியில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர் 10,15,20 அடி நீளமுள்ள அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும், குழந்தைகளை சுமந்தும் பக்தி பரவசத்துடன் கிராமத்தை வலம் வந்து பூக்குழி இறங்கி சாமிதரிசனம் செய்தனர்.