ஆன்மிகம்

ஆவரைகுளம் அதிசய தெய்வம் ஸ்ரீ முத்தாரம்மன்

அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் வீற்றிருக்கும் ஆலயம் நெல்லை குமரி எல்லையில் ஆவரைகுளம் எனும் அற்புத ஊரில் அமையப் பெற்றுள்ளது.

எல்லை இல்லா அருள்பரப்பி ஏகமெங்கும் நிறைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் வீற்றிருக்கும் ஆலயம் நெல்லை குமரி எல்லையில் பழவூர் அருகில் ஆவரைகுளம் எனும் அற்புத ஊரில் அமையப் பெற்றுள்ளது. ஆவரை குளத்தில் வசிக்கும் மக்களின் முன்னோடிகள் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் குடியிருந்தவர்கள் என்பது வரலாற்று உண்மை. விவசாயம் தான் இவர்களது பிரதான தொழில். இது விவசாய பூமி என்பதால் ஆவாரைப்பூக்கள் பூத்துக் குலுங்கியதால் ஆரம்பத்தில் ஆவாரைகுளம் என அழைக்கப்பட்டு பின் அது மருவி ஆவரைகுளம் ஆகிவிட்டது.

ஆவரைகுளம் ஊரை சேர்ந்த பெட்டிய பரதேசி என்பவர் அரசூர் பூச்சிக் காட்டை சேர்ந்த உலகளந்தாள் என்ற பெண்ணை திருமணம் செய்து தனக்கு துணைவியாக் கினார்.உலகளந்தாளுக்கு கணவன் மீது எவ்வளவு பாசமோ அதே அளவுக்கு பூச்சிக்காட்டில் அருள் செய்த முத்தாரம்மன் மீதும் பாசம். அதனால், தான் பிறந்த மண்ணைவிட்டு வரும் போது முத்தாரம்மன் கோவிலில் இருந்து பிடிமண்ணை எடுத்து வந்தார். அந்த பிடிமண்ணை வைத்து முத்தாரம்மனுக்கு பீடம் அமைத்து அதற்கு மேல் ஓலைக்கூரை வேய்ந்து தினமும் அம்மனை வழிபட்டு வந்தாள்.

அவருக்கு துணையாக அவளுடைய தம்பி ஆண்டியும் வந்து சேர்ந்தார். அக்காள் உலகளந்தாள் பூசாரியாகவும், தம்பி ஆண்டி சாமியாடியாகவும் அம்மனுக்கு தொண்டு செய்து வந்தனர்.

உலகளந்தாளின் காலத்திற்குப்பின் தம்பி ஆண்டி அனைத்து பொறுப்புகளையும் கவனித்து அம்மனுக்கு பூஜை செய்து வந்தார். அம்மனின் கருணையும் பெருமையும் பரவி வந்தது.

இதைக்கண்ட ஏகம் படைத்த இறைவன் அய்யா வைகுண்டர் ஊருக்கு எழுந்தருளினார்.ஆண்டியின் பக்தியை உலகறிய செய்ய ஆண்டியும் வைகுண்டரும் ஒரு பிரம்பை பிடித்து சாமி ஆடினர். பிரம்பானது இரு சம பாகமாக உடைந்தது. ஆண்டியின் பாதி பிரம்பு இன்றளவும் அம்மன் முன்னால் வைத்து பூஜிக்கப்படுகிறது. ஆண்டிச்சாமியின் நல்ல சேவையை மெச்சிய அய்யா வைகுண்டர் இந்த ஆவரை குளம் அசையா பட்டணமாக விளங்கும் என்று அருள் பாலித்து சென்றார்.

ஆவரை குளம் மக்களால் அன்று உலகளந்தம்மாள் பிடிமண்ணை எடுத்து பீடம் அமைத்த இடம் இன்று பெருங்கோவிலாக உயர்ந்து மிளிர்ந்து நிற்கிறது.

பல லட்ச ரூபாய் செலவில் ஆவரைகுளம் முத்தாரம்மன் எல்லைக்குள் கலையரங்கம், அலங்கார மஹா மண்டபம், வேதாள மண்டபம், மற்றும் 81 அடி ராஜகோபுரமும் கண்கவரும் கலைநயத் தோடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இத்திருப்பணிக்கு அடிக்கல் நாட்டியவர் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். வருடந்தோறும் சித்திரை மாதம் 10 நாட்கள் கொடைவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

முத்தாரம்மன் அருள் கிடைக்க ஆவரைகுளம் வாருங்கள், அதன்பின் அற்புதத்தை பாருங்கள்.