மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு இருமுடிகட்டி வந்தவர்களை படத்தில் காணலாம். 
ஆன்மிகம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை நாளை நடக்கிறது

குமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. வலியபடுக்கை பூஜை நாளை நடக்கிறது.

குமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலை ‘பெண்களின் சபரிமலை‘ என அழைப்பார்கள். இந்த கோவிலில் மாசித்திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ‘

திருவிழா நாட்களில் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பெண்கள் இருமுடி கட்டுகளுடன் வந்து சாமி தரிசனம்செய்வது வழக்கம். அதன்படி கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் இருமுடி கட்டுகளுடன் மண்டைக்காடு கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் பொங்கலிட்டு பகவதி அம்மனை வழிபட்டனர்.

இந்தநிலையில் 6-ம் நாள் திருவிழாவான வலியபடுக்கை எனும் மகாபூஜை நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. வருடத்திற்கு 3 முறை மட்டுமே நடக்கும் வலியபடுக்கை பூஜை, கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை, மாசித்திருவிழாவின் 6-ம் நாள் மற்றும் மீனபரணி கொடை விழா ஆகிய தினங்களில் மட்டுமே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

வலியபடுக்கை பூஜையையொட்டி காலை 6.30 மணிக்கு தீபாராதனையும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனிவருதல், பகல் 12 மணிக்கு யானை மீது களப பவனி, 1 மணிக்கு உச்சிகால பூஜையும், அன்னதானமும் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு களிமார் கணேசபுரம் பிள்ளையார்கோவிலில் இருந்து யானை மீது களப பவனியும், 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி, 8.30 மணிக்கு சமய மாநாடு ஆகியவை நடக்கிறது. 9 மணிக்கு அத்தாள பூஜையும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிபல்லக்கில் பவனிவருதலும், நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை பூஜையும் நடக்கிறது.

SCROLL FOR NEXT