குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இரு முடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.
இங்கு ஆண்டு தோறும் மாசிக்கொடை விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 3-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் சமய மாநாடு திடலில் தினமும் ஆன்மீக உரை நிகழ்ச்சிகள், பக்தி பஜனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் காலை மற்றும் இரவு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், மதியம் உச்ச பூஜை ஆகியவை நடந்தது. விழாவையொட்டி கேரளா மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் மண்டைக்காட்டில் குவிந்து பொங்கலிட்டு அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
நேற்று காலை 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, வெட்டுமடை இசக்கியம்மன் கோவிலில் இருந்து சந்தனக்குடம் எடுத்து வருதல், 1 மணிக்கு உச்ச பூஜை, மாலை கொத்தனார்விளை விடாலமுத்து சிவன் கோவிலில் இருந்து யானை மீது களபம், சந்தனக்குடம் கொண்டு செல்லுதல், 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழந்தருளல் ஆகியவை நடைபெற்றது. விழாவையொட்டி மாலை மற்றும் இரவு நேரங்களில் கேரளாவில் இருந்து ஏராளமான பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை தரிசனம் செய்து வருகிறார்கள்.