மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி மூலத்திருவிழாவில் சிவபெருமானின் திருவிளையாடல்கள் தினமும் நிகழ்த்தப்படுகின்றன. 7-ம் நாளான நேற்று வளையல் விற்ற லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார்.
இந்த விழாவையொட்டி சுவாமியும், அம்மனும் காலையில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி ஆவணி மூலவீதி, மேலமாசிவீதி வழியாக இன்மையிலும் நன்மை தருவார் கோவிலுக்கு சென்றனர். அங்கிருந்து மாலை தங்கப்பல்லக்கில் புறப்பட்டு மேலமாசி வீதி, மேலக்கோபுர தெரு, தானப்ப முதலியார் அக்ரஹாரம், வடக்கு ஆவணி மூலவீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
அதன்பின் கோவிலில் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் இரவு 6.40 மணிக்கு சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் நடந்தது. அப்போது சுவாமிக்கு செங்கோல், வைர கிரீடம் சாற்றப்பட்டது. சுவாமியின் பிரதிநிதியாக கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் செங்கோலை பெற்று, 2-ம் பிரகாரம் வலம் வந்து, மீண்டும் சுவாமியிடம் கொடுத்தார்.
இதை தொடர்ந்து இன்று முதல் சுந்தரேசுவரர் ஆட்சி 8 மாதங்களுக்கு நடைபெறுவதாக ஐதீகம்.
நிகழ்ச்சியில் கோவில் இணை கமிஷனர் நடராஜன், கோவில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.