ஆன்மிகம்

இதிகாசங்களில் வரும் புராண கதாபாத்திரங்கள்

புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் பார்க்கலாம்.

கீசகன்

விராட தேசத்து அரசரின் மைத்துனன்தான் இந்த கீசகன். பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின் கடைசி காலத்தை விராட தேசத்தில் அரசருக்கு சேவை செய்து கழித்து வந்தனர். திரவுபதி ராணிக்கு சேவை செய்து வந்தாள். ராணியின் சகோதரனான கீசகன் திரவுபதியின் மீது ஆசை கொண்டு அவளை அணுகினான். திரவுபதி கீசகனை நாளை சந்திப்பதாக கூறி அவனிடமிருந்து லாவகமாக தப்பிச் சென்றாள். மறுநாள் பீமன் பெண்போல வேடமணிந்து அங்கு நிற்க, கீசகன் அது திரவுபதி என்று எண்ணி அருகில் செல்ல, பெண் வேடத்தில் இருந்த பீமன், கீசகனை கொன்றான்.

பரசுராமர்

ஜமதக்னி-ரேணுகா தம்பதியருக்கு பிறந்தவர் பரசுராமர். விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாக இவர் போற்றப்படுகிறார். இவர் சிவனிடம் இருந்து போர் பயிற்சி பெற்றவர். இவரது ஆயுதமான ‘பரசு’ சிவபெருமான் இவருக்கு கொடுத்தருளியது. ஒருமுறை கர்த்தவீரியன் என்னும் அரசன் ஜமதக்னியின் குடிசைக்கு வருகை தந்தான். கர்த்தவீரியன் ஆயிரம் கரங்கள் உடையவன் ஆவான். ஜமதக்னி தம்பதியரின் உபசரிப்பில் கர்த்தவீரியன் மனம் மகிழ்ந்தான். அவன் அங்கிருந்து செல்கையில் தெய்வீக பசுவான காமதேனுவை வலுக்கட்டாயமாக கவர்ந்து சென்றான். இதனால் ஆத்திரமுற்ற பரசுராமர் கர்த்தவீரியனை வதம் செய்தார். மேலும், சத்திரிய இனத்தை பூமியில் இருந்தே முழுவதுமாக அழிப்பேன் என்றும் சபதமேற்றார்.

மாண்டவி

ராமனின் சகோதரன் பரதனின் மனைவிதான் இந்த மாண்டவி. அவருக்கு சவுபாகு, சுராசேனா என்று இரண்டு மகன்கள். அவர்கள் கந்தவர்களை தோற்கடித்து சிந்து நதிக்கரையில் அவர்களது ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினர்.

மத்திர ராஜ்ஜியம்

பாரதத்தின் பழமையான ராஜ்ஜியம். இது ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ளது. பாண்டுவின் மனைவி மாதுரி மத்திர ராஜ்ஜியத்து இளவரசி ஆவார். அர்ச்சுனன் பிறந்த போது,‘‘இந்த குழந்தை பெரியவனான பின்பு மத்திர ராஜ்ஜியம் போல பல ராஜ்ஜியங்களை வெல்வான்’’ என்று அசரீரி ஒலித்தது.

பாதாள உலகம்

பூமிக்கு அடியில் இருக்கும் நாகர்களின் உலகம் பாதாள உலகம் என்று அழைக்கப்படுகிறது. பாதாள உலகம் கிரானைட் மற்றும் தங்கம் ஆகியவற்றால் நிறைந்திருக்கும்.

மதுவனம்

வானர அரசன் சுக்ரீவனுக்கு சொந்தமான தோட்டம். சீதையைக் கண்டறிந்த பின் அனுமன் இந்த தோட்டத்திற்கு அங்கதன் மற்றும் பிற வானரங்களுடன் வந்தார். அங்கு அவர்களுக்கு பிடித்தமான தேனை உண்டனர்.