இதிகாசங்களில் வரும் புராண கதாபாத்திரங்கள் 
ஆன்மிகம்

இதிகாசங்களில் வரும் புராண கதாபாத்திரங்கள்

புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் படைப்புகளை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

சுபலன்

காந்தார தேசத்தை அரசாட்சி செய்தவன், சுபலன். இவரது மகள்தான் காந்தாரி. சுபலனின் கடைசி மகன் தான் சகுனி. காந்தாரியை, கண் தெரியாத திருதிராஷ்டிரருக்கு மணம் முடிக்க பீஷ்மர் முடிவு செய்தார். அதற்காக சுபலனிடம் பேசியபோது, கண் தெரியாதவருக்கு தன் மகளைத் தருவதாக என்று நினைத்தாலும், அஸ்தினாபுரத்தின் அரசாட்சியோடு மோத முடியாது என்பதால் அதற்கு ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் காந்தாரிக்கு ஏற்கனவே திருமணம் நடந்து முடிந்ததாக, பீஷ்மருக்கு தகவல் கிடைத்தது. விசாரித்தபோது, காந்தாரிக்கு திருமணமானால் முதல் கணவனுக்கு ஆயுள் கிடையாது என்று ஜோதிடரீதியாக சொல்லப்பட்டது. எனவே அவளுக்கு ஒரு ஆட்டை திருமணம் செய்து வைத்து, அதனை பலி கொடுத்து விட்டனர். அப்படி பார்த்தால், காந்தாரி ஒரு விதவை. எனவே பீஷ்மர் கோபம் கொண்டார். இப்படி ஒரு விஷயத்தை தன்னிடம் இருந்து மறைத்ததற்காக, சுபலன் மற்றும் அவரது பிள்ளைகள், உறவினர்கள் அனைவரையும் சிறையில் அடைத்தார். அவர்களது வம்சமே இல்லாமல் அழிப்பது பாவம் என்று அறிஞர்கள் கூறியதால், தினமும் இரண்டு பிடி சோறும், ஒரு சுரக்காய் குடுவையில் தண்ணீர் மட்டும் கொடுக்க பீஷ்மர் உத்தரவிட்டார்.

ஆனால் அதை உண்பதில் சுபலன் வம்சத்தினருக்குள் கடும் சண்டை ஏற்பட்டது. அதில் சிறிதளவே கிடைத்த உணவும், தண்ணீரும் கூட வீணாகிப் போனது. அப்போது சுபலன் ஒரு யோசனை சொன்னார். “நமக்கு அளிக்கப்படும் உணவை, ஒருவர்தான் உண்டு உயிர் வாழ முடியும். அந்த நபர் புத்திசாலியாகவும், பீஷ்மரின் வம்சத்தை அழிப்பவராகவும் இருக்க வேண்டும்” என்றார். அதன்படி சிறுவயதிலேயே புத்திசாலியாக திகழ்ந்த சகுனியை அனைவரும் தேர்வு செய்தனர். சகுனியின் கண் முன்பாகவே அவரது ஒவ்வொரு சொந்தமாக செத்து மடிந்தது.

சுபலன், சகுனியின் ஒரு காலை அடித்து உடைத்தார். “நீ நொண்டி நடக்கும் போதெல்லாம் பழி வாங்கும் எண்ணம் உன் நினைவில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்” என்றார். மேலும் தான் இறந்த பிறகு, தன்னுடைய கை எலும்பைக் கொண்டு தாயக் கட்டைகள் செய்து கொள்ளும்படியும், அது விரும்பிய எண்களை வழங்கும் என்றும் கூறினார். இறுதியில் அதைக் கொண்டுதான் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் சண்டையை பெரிதாக்கினார், சகுனி.

கன்வ முனிவர்

ரிக் வேத கால முனிவர்களில் ஒருவராக, கன்வ முனிவரை புராணங்கள் சித்தரிக்கின்றன. இவர் ஆங்கிரஸ முனிவரின் மகன் ஆவார். கன்வ முனிவரின் ஆசிரமம், உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள மாலினி ஆற்றங்கரையில், கோட்துவாரா என்ற இடத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.

பிரம்ம ரிஷி பட்டம் பெறுவதற்காக கடும் தவம் இருந்தார், விசுவாமித்திரர். அவரது தவத்தை கலைக்க மேனகை என்ற தேவலோக நடன மங்கையை அனுப்பிவைத்தான் இந்திரன். அவளும் விசுவாமித்திரரின் தவத்தை கலைத்தாள். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்தக் குழந்தையையும், மேனகையையும் ஏற்க மறுத்து மீண்டும் தவம் செய்ய சென்று விட்டார் விசுவாமித்திரர். மேனகை தன்னுடைய குழந்தையை ஒரு வனப் பகுதியில் விட்டுச் சென்றாள். அந்தக் குழந்தையை கொடிய மிருகங்கள் எதுவும் தாக்கி விடாமல் இருக்க, சகுன் என்ற பறவைகள் அந்தக் குழந்தையை சூழ்ந்திருந்தன. அக்குழந்தையை கண்டெடுத்த கன்வ முனிவர், சகுன் பறவைகள் சூழ காணப்பட்ட அந்தக் குழந்தைக்கு ‘சகுந்தலா’ என்று பெயரிட்டு வளர்த்தார்.

ஏகசக்ரா

அரக்குமாளிகை ஒன்றை கட்டி, அதில் பாண்டவர்களை தங்க வைத்தான் துரியோதனன். அவர்கள் அங்கு இருக்கும் நேரத்தில் அரக்கு மாளிகைக்கு தீவைத்து, பாண்டவர்களை கூண்டோடு அழிப்பது அவனது எண்ணம். ஆனால் அந்த அரக்கு மாளிகையில் இருந்து யாருக்கும் தெரியாதபடி, பாண்டவர்களும், குந்தி தேவியும் தப்பினர். அவர்கள் சென்ற ஒரு ஊர்தான், ‘ஏகசக்ரா.’ இந்த ஊரில் பகாசுரன் என்ற அசுரன் இருந்தான். அவனால் ஊர் மக்கள் துன்பத்தில் தவித்து வந்தனர். தினமும் மாட்டு வண்டி நிறைய உணவுடன் ஒருவர் அந்த அசுரனுக்கு உணவு கொண்டு செல்ல வேண்டும். உணவோடு, வண்டி மாடுகளையும், அதை ஓட்டி வந்தவரையும் கூட உணவாக்கிக் கொள்வான் அசுரன். இதை அறிந்த குந்தி தேவி, தன்னுடைய மகன்களில் உடல்வலிமை பெற்றவனான பீமனை, அன்றைய தினம் பகாசுரனுக்கு உணவு கொண்டு செல்ல கூறினாள். அதன்படி வண்டி நிறைய உணவுடன் சென்ற பீமன், அசுரனை அழித்தான். அதனால் ஏகசக்ரா நகரில் வாழ்ந்த மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.