சென்னை கோயம்பேட்டில் சுமார் 25,200 சதுரடி பரப்பளவில் குறுங்காலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. குச மற்றும் லவர்கள் ராமரின் அஸ்வமேத யாகக் குதிரையைக் கட்டி, அதை அம்புகளால் வேலியிட்டு (அம்பு-வேலி-பேடு) தடுத்த இடமே 'கோயம்பேடு' என்று மருவியதாக கூறப்படுகிறது.
இறைவன்: குறுங்காலீஸ்வர்
இறைவி: தர்மசம்வர்த்தினி
தலவிருட்சம்: மகிழ மரம்
சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே தேரில் சென்றபோது சக்கரம் லிங்கம் மீது ஏறி, ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு, கோயில் எழுப்பினான்.
தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாணம் பாதி புதைந்துவிட்டது. எனவே இங்கு சிவன் குறுகியவராக குள்ளமாக காட்சி தருகிறார்.
இதனால் சுவாமிக்கு குறுங்காலீஸ்வரர் என்ற பெயர் உண்டானது. குசலவம் என்றால் குள்ளம் என்றும் பொருள் உண்டு. இந்த ஆலயம் பிற்கால சோழர்கள் காலத்தில், குறிப்பாக முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டுள்ளது.
வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியஸ்தலமாக இக்கோவில் விளங்கி வருகிறது. அயோத்தியில் ராமபிரான் ஆட்சிப்பொறுப்பற்ற பின்பு, சீதையன் கற்பிற்கு களங்கம் உண்டாகும்படி சிலர் பேசினர்.
சீதையின் கற்பை நிருபிக்க ராமர் சீதையை வனத்திற்கு அனுப்பினார். வால்மீகி ஆசிரமத்தில் தங்கிய சீதை, லவன், குசன் என்னும் இரு மகன்களை பெற்றெடுத்தாள் . ராமர் தனது தந்தை என தெரியாமலேயே, லவகுசர் வளர்ந்தனர்.
இந்நேரத்தில் ராமபிரான், அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடத்தினார். அங்கு வால்மீகி முனிவரின் உத்தரவின் பேரில் சென்ற லவகுசர், மனைவி இல்லாமல் அஸ்வமேத யாகம் நடத்துவது சாஸ்திர விரோதம் என்பதாலும், சீதாவை காட்டுக்கு அனுப்பிவிட்டதை அறிந்தும் ராமபிரான் மீது கோபம்மடைந்து தாங்கள் வசித்த வனத்துக்கே திரும்பி விட்டனர்.
அப்போது ஒரு யாகக் குதிரை லவகுசர் வசித்த பகுதிக்கு வந்தது. அவர்கள் அவற்றை கட்டிபோட்டுவிட்டனர். குதிரையுடன் வந்த சத்ருக்கனன் குதிரையை விடுவிக்கச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. அவனுடன் போரிட்டு வென்றதோடு, குதிரையை மீட்க வந்த லட்சுமணருடனும் போரிட்டு வென்றனர். இவர்களைத் தேடி ராமனும் இங்கு வந்தார்.
இதையறிந்த வால்மீகி லவகுசர்களிடம், ராமனே அவர்களது தந்தை என்பதையும், அவர்களது அன்னையே சீதா என்பதையும், எந்தச் சுழ்நிலையில் சீதாதேவியை ராமபிரான் காட்டுக்கு அனுப்பினார் என்பதையும் விளக்கினார்.
இருப்பினும், தந்தையை எதிர்த்ததால் லவகுசருக்கு பித்ரு தோஷம் ஏற்பட்டது. வால்மீகியின் ஆலசோனைப்படி இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்து தோஷம் நீங்கப்பெற்றனர். சுவாமிக்கு குசலவபுரீஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்டது.
பித்ரு தோஷம் உள்ளவர்கள், மகாளய அமாவாசை போன்ற நாட்களில் இங்குள்ள குசலவ தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை வழிபட்டால் முன்னோர்களின் சாபம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு காலத்தில் ஆலிங்கண சரபேஸ்வரர் பெருமானுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகிறது.
காலை 5.30 மணி முதல் 12 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை