ஆன்மிகம்

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் கால்நாட்டு நிகழ்ச்சி

தூத்துக்குடி குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆனி கொடை விழா வருகிற 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலும் ஒன்றாகும். கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடை விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆனி கொடை விழா வருகிற 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.

விழாவின் சிகர நாளான வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தங்கமுக அலங்காரத்தில் வீற்றிருக்கும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து, தாமிரபரணி ஆற்றங்கரையில் தங்கியிருந்து, பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபடுவார்கள்.

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழாவை முன்னிட்டு கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் விநாயகர், அம்மன் , நாராயணர், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து முப்பிடாதி அம்மன் சன்னதி முன்பு 60 பங்கு நாடார்களால் அலங்கரிக்கப்பட்ட கால் நடப்பட்டது. பின்னர் ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பானகரம் வழங்கப்பட்டது. கோவிலில் கால் நட்டப்பட்டதால், குரங்கணி ஊர் மக்கள் விரதத்தை தொடங்கினர். கால்நாட்டும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் அஜீத் மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னை வாழ் குரங்கணி நாடார் வியாபாரிகள் சங்கத்தினர், கோவை வாழ் குரங்கணி நாடார் வியாபாரிகள் சங்கத்தினர், ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.