மின்னொளியில் ஜொலிக்கும் குமரக்கோட்டம் முருகன் கோவில் 
ஆன்மிகம்

18 ஆண்டுகளுக்கு பிறகு 29-ந்தேதி கும்பாபிஷேகம்: மின்னொளியில் ஜொலிக்கும் குமரக்கோட்டம் முருகன் கோவில்

கும்பாபிஷேகத்தை பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து பார்ப்பதற்காக 9 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்படுகிறது. காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் இருந்து சங்கர மடம் வரை கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம் 18 ஆண்டுகளுக்கு பிறகு 29-ந்தேதி நடைபெற உள்ளது. கோவில் வளாகம் மின்னொளியில் ஜொலிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 50 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த புராணம் அரங்கேறிய திருத்தலம் ஆகும். இந்த கோவிலில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற உள்ளது.

இதனையொட்டி கோவில் கோபுரம், ஆலய வளாகம் மற்றும் கோவில் அமைந்துள்ள மேற்கு ராஜ வீதி பகுதி முழுவதும் வண்ண, வண்ண மின் விளக்குகளால் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு உள்ளன.

இரவு நேரத்தில் வண்ண ஒளிகளில் குமரகோட்டம் கோவிலில் உள்ள கோபுரம் உள்ளிட்ட அனைத்து பகுதியும் மின்னொளியில் ஜொலிக்கிறது.

அடிப்படை வசதிகள்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குமரக்கோட்டம் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக கும்பாபிஷேக நிர்வாக குழு உறுப்பினர்கள் பிரமிங் இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் சி.ராதா கிருஷ்ணன், பச்சையப்பன் பிரபு, நவீன் குமார், வெங்கடேசன், பிரவீன் குமார், பெரியண்ணன் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-

குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற 29-ந்தேதி நடைபெறுகிறது. சுமார் 50ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

கும்பாபிஷேகத்தை பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து பார்ப்பதற்காக 9 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்படுகிறது. காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் இருந்து சங்கர மடம் வரை கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு விருந்தினராக சங்கராச்சாரியார் விஜயேந்திரர், இளைய பீடாதிபதி சத்திய சந்திரசேகரேந்திரர் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாசம் பங்கேற்று அவர்களது நல்லாசிகளுடன் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. 29-ந்தேதி அதிகாலை 4 .30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறும். கும்பாபிஷேகம் முடிந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து முடிந்த பிறகு 8 மணிக்கு பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

விழாவில் அமைச்சர்கள் ரமேஷ், தென்னரசு, ரஞ்சித் குமார் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் சி.குமர துரை, செயல் அலுவலர் கா.கேசவன், மற்றும் கும்பாபிஷேக நிர்வாக குழு உறுப்பினர்கள், உபயதாரர்கள், சிவாச்சாரியார்கள் ஆகியோர் செய்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். குமரகோட்டம் கோவில் கும்பாபிஷேகத்தால் காஞ்சிபுரம் நகரம் விழாக்கோலமாக காட்சி அளிக்கிறது.

SCROLL FOR NEXT