திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. மன்னர் திப்பு சுல்தானின் படை வீரர்கள் மாரியம்மனை வழிபட்டு வந்துள்ளனர். இக்கோவில் மலைக்கோட்டைக்கு அருகில் அமைந்துள்ளதால் காலப்போக்கில் கோட்டை மாரியம்மன் கோவில் என்ற பெயர் நிலை பெற்றுள்ளது. இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தேர் அமைக்கப்பட்டது. அதில் அம்மன் முக்கிய விசேஷ நாட்களில் வலம் வருவது வழக்கம்.
இந்நிலையில் இந்த கோவிலுக்கு மரத்தேர் செய்வது என முடிவெடுக்கப்பட்டது. அதற்கான முழு செலவையும் திண்டுக்கல் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வர்த்தகர் சங்கத்தினர் ஏற்றுக்கொண்டனர். கடந்த ஒரு வருடமாக மரத்தேர் செய்வதற்கான பணிகள் நடைபெற்றது. இப்பணிகள் தற்போது நிறைவு பெற்று மரத்தேர் முழுவடிவம் பெற்றுள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சண்முக முத்தரசப்பன் கூறியதாவது:-
பொதுவாக, பிரசித்தி பெற்ற கோவில்களில் மரத்தேர் இருப்பது வழக்கம். ஆனால் கோட்டை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக இருந்தும் இங்கு மரத்தேர் இல்லை. அக்குறையை போக்க ரூ.22½ லட்சம் மதிப்பில் மரத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள மரத்தேர், 12½ அடி அகலம், 12½ அடி நீளம், 31¼ அடி உயரம் கொண்டது. இந்த தேரில் 2 குதிரைகள், சாரதி பத்மாசனம், அம்மன் வீற்றிருக்கும் சிம்மாசனம், 100-க்கும் மேற்பட்ட பதுமை பொம்மைகள் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த தேரின் சக்கரங்கள் இரும்பால் செய்யப்பட்டுள்ளது. அதன் உயரம் 5½ அடி, அகலம் ½ அடி ஆகும். இதற்கான முழு செலவையும் திண்டுக்கல் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வர்த்தகர் சங்கத்தினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். சென்னை, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஒப்புதல் படி மரத்தேர் உருவாக்கப்பட்டுள்ளதா? என்பதை உதவி செயற்பொறியாளர் பார்வையிட்ட பிறகு அடுத்த மாதம் 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வெள்ளோட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.