குண்டம் இறங்கும் இடத்தில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்ட போது எடுத்த படம். 
ஆன்மிகம்

கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா

பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா மற்றும் தேர்த்திருவிழா வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து தினமும் காலை, மாலை சிறப்பு பூஜை, கிராம சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை அம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு அம்மன் புறப்பாடு, குதிரை வாகன காட்சி நிகழ்ச்சிகளும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீர் நிரப்புதல், 6 மணிக்கு தோரணம் கட்டுதல், இரவு 9.45 மணிக்கு பரிவட்டம் கட்டுதல், திருக்கல்யாணம், பக்தர்களுக்கு காப்பு அணிவித்தல், மஞ்சள் நீராடுதல், பொங்கல் வைத்தல், இரவு 10 மணிக்கு அம்மன் புறப்பாடு, புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா ஆகியவை நடைபெறுகிறது.

நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு சக்திவேல்களுக்கு மஞ்சள் நீராட்டுதல், குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு எண்ணெய் வழங்குதல், 9 மணிக்கு படைக்கல சாவடியில் பொங்கலிடுதல், குதிரையுடன் படைக்கலம் புறப்படுதல், நள்ளிரவு 1 மணிக்கு பரிவார மூர்த்திகளின் கன்னிமார், கருப்பராயன், முனீஸ்வரன் சிறப்பு வழிபாடு, அம்மை அழைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.


விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி 19-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்க உள்ளனர். காலை 6 மணிக்கு அன்னதான விழா நடைபெறுகிறது.

குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ள இருப்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பக்தர்களின் வசதிக்காகவும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் பக்தர்கள் குண்டம் இறங்கும் இடத்தில் பக்தர்கள் உப்பு கொட்டியும், தீபங்கள் ஏற்றியும் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். விழாவையொட்டி கோவில் அருகில் தனியார் பங்களிப்புடன் 32 அடியிலான பிரமாண்ட வேல் அமைக்கப்படுகிறது. அன்று மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.